இஸ்லாமாபாத்: வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசு பொருட்களை விற்ற விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது. போலீஸார் கைது செய்ய சென்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், கடந்த 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (பிடிஐ) தொடங்கினார். கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிடிஐ கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்த நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்.
பாகிஸ்தானில் விலைவாசி உயர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதன்காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது.
அவர் பிரதமராக இருந்தபோது பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். அப்போது வெளிநாடுகளின் தலைவர்கள், இம்ரான் கானுக்கு விலைஉயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கினர். பாகிஸ்தான் சட்ட விதிகளின்படி பிரதமருக்கு அளிக்கப்படும் பரிசுப் பொருட்களை கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அவற்றை அவர் முறைகேடாக விற்றுவிட்டதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தில் இம்ரான் கான் அளித்த விளக்கத்தில், ‘‘கருவூலத்தில் இருந்த பரிசு பொருட்களை ரூ.2.15 கோடிக்கு வாங்கினேன். அவற்றை ரூ.5.8 கோடிக்கு விற்பனை செய்தேன்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இம்ரான் கான் 3 முறை ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டை நீதிமன்றம் பிறப்பித்தது.
உடனடியாக செயல்பட்ட இஸ்லாமாபாத் போலீஸார், லாகூரில் உள்ள இம்ரான் கான் வீட்டுக்கு நேற்று மதியம் சென்றனர். அங்குஅவர் இல்லை. அடுத்த சில மணி நேரங்களில் லாகூரில் உள்ளஜாமன் பூங்காவில் அவர் திடீரென தோன்றி பேசினார். அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். ஆனால்பிடிஐ கட்சி தொண்டர்கள் போலீஸாரை உள்ளே அனுமதிக்க வில்லை. அங்கிருந்தும் இம்ரான் கான் தப்பிவிட்டார்.
இதுகுறித்து இஸ்லாமாபாத் போலீஸார் கூறும்போது, ‘‘இம்ரான்கான் தலைமறைவாக இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை கைது செய்யவிடாமல் கட்சித் தொண்டர்கள் தடுக்கின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார்’’ என்று தெரிவித்தனர்.