கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா நுழைவு கட்டணம் மூலம் 11 மாதத்தில் ரூ.1.45 கோடி வசூலாகியுள்ளது என பூங்கா மேலாளர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில், மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்வது ஏரிக்கு அருகேயுள்ள பிரையண்ட் பூங்கா. தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் பல லட்சம் வண்ண மலர்கள் உள்ளன. இதனை பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தற்போது பிப்ரவரி மாதம் முடிய இந்த பிரையண்ட் பூங்காவை ரசிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 691 பேர் வந்து சென்றுள்ளனர். இதன்மூலம் பிரையண்ட் பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் கொடுத்த நுழைவு கட்டணம் ரூ.1 கோடியே 45 லட்சத்து 18 ஆயிரத்து 314 ஆகும். இதே காலகட்டத்தில் இதற்கு முந்தைய ஆண்டு 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் மட்டுமே வந்து சென்று உள்ளனர். அப்போது சுற்றுலாப் பயணிகள் கொடுத்த நுழைவு கட்டணம் ரூ.57 லட்சத்து 45 ஆயிரம் மட்டுமே ஆகும். இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்காக விரைவில் நெதர்லாந்து நாட்டிலிருந்து 2 ஆயிரம் லில்லியம் மலர்கள் ஐந்து வண்ணங்களில் கொண்டு வந்து நடுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இப்பூங்காவில் பெட்டூனியம், டயந்தஸ், மேரி கோல்ட், பெக்கோனியா, பேன்சி, பிளாக்ஸ், காலண்டூலா உள்ளிட்ட நூறு வகைகளை சேர்ந்த பல லட்சம் மலர் நாற்றுக்கள் மூன்று கட்டங்களாக நடப்பட்டு உள்ளன. இந்த மலர் நாற்றுக்கள் வரும் மே மாதத்தில் கொடைக்கானலில் நடைபெற உள்ள 60வது மலர் கண்காட்சிக்கு ஏற்றபடி பூப்பதற்கு உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.