டெல்லி : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்து தற்போது ரூ.1,018ஐ கடந்துள்ள நிலையில், அவற்றிற்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் மானியம் ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு கொண்டே வருகிறது. 2018-2019ம் ஆண்டில் ரூ.37209 கோடியும் 2019-2020ம் ஆண்டில் ரூ.24,172 கோடியும் 2020-2021ம் ஆண்டில் 11,896 கோடி ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டது. இப்படி படிப்படியாக குறைந்து கொண்டே வந்த மானியத் தொகை அடுத்த நிதியாண்டில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2021-2022ம் ஆண்டில் வெறும் ரூ.1,811 கோடி மட்டுமே மானியமாக வழங்கப்பட்டது.
அத்துடன் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள், பெண்களே குடும்பத் தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டு 8 கோடி இணைப்புகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இந்த இணைப்புகளின் எண்ணிக்கையானது 2023ம் ஆண்டில் வெறும் 1.6 கோடியாக குறைக்கப்பட்டது. மீதமுள்ள சுமார் 6.5 கோடி குடும்பங்கள் மானியமில்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்க நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இப்படி ஏழை மக்களை நெருக்கடியில் தள்ளி இருக்கும் ஒன்றிய அரசு பெட்ரோலிய பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக அந்த நிறுவனங்களுக்கு 22,000 கோடி ரூபாயை இழப்பீட்டு தொகையாக கொடுத்துள்ளது.