சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் 1,000 தனியார் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் அனுமதி வழங்கவுள்ளது. இதற்கான அறிவுரைகளை வழங்க ஆலோசகர் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் அரசு வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வரும் காலத்தில் அரசு பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு சிஐடியு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் இன்று காலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.