புதுடெல்லி: நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு (2023) நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்தியது. 277 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 902 மையங்களில் 2,08,898 பேர் கணினி மூலம் இந்தத் தேர்வை எழுதினர்.
தேர்வில் முறைகேடு நடைபெறுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை என்பிஇஎம்எஸ் மேற்கொண்டிருந்தது. குறிப்பாக விரல்ரேகை பதிவு, சிசிடிவி கண்காணிப்பு, ஆவண சரிபார்ப்பு, செல்போன் ஜாமர்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதுடன் தடையில்லா மின்சார விநியோகம் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரில் உள்ள ஒரு தேர்வு மையத்துக்கு திடீரென சென்ற மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அந்த மையத்துக்கு வெளியே காத்திருந்த மாணவர்களின் பெற்றோருடனும் அமைச்சர் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். நீட் தேர்வு மையத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஆய்வு செய்தது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.