இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக, மணமேடை வரை சென்று பல திருமணங்கள் நின்றுள்ளன. வரதட்சணையில் தொடங்கி, உறவினர் தகராறு, காதல் பிரச்னை மற்றும் பல விநோத காரணங்களும் இதில் அடங்கும். ஆனால் கர்நாடகாவில், திருமணத்துக்காக மணப்பெண் போட்டுக்கொண்ட மேக்கப்பால் ஒரு கல்யாணம் நின்றுபோயுள்ளது.
கர்நாடக மாநிலம், ஹசான் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் பேசி முடித்து, கடந்த 2-ம் தேதி முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தன் திருமணத்துக்காக அருகில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று மணப்பெண் மேக்கப் போட்டுக்கொண்டுத் தயாராகியுள்ளார்.
திருமணத்தன்று தான் மிகவும் தனித்துவமாகத் தெரியவேண்டும் என்பதற்காக மேக்கப் போட்ட பிறகு, அது கலையாமல் இருக்க, மணப்பெண் வெந்நீரில் ஆவி பிடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் அவரது முகம் திடீரென கருமையாக மாறி வீங்கியுள்ளது.
மேலும், முகம் முழுவதும் கொப்புளங்களுடன் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இதனால் மணப்பெண் குடும்பத்தினர், செய்வதறியாது திகைத்துள்ளனர். அதற்குள் இந்த தகவல் மணமகனின் வீட்டிற்குத் தெரியவே, இப்போதைக்குத் திருமணம் வேண்டாம் என மாப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதை கேட்டதும் அதிர்ந்து போன மணப்பெண் வீட்டார், பின்னர் பியூட்டி பார்லர் உரிமையாளரான கங்கா என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அரிசிகெரே காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கங்காவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேக்கப்பால் ஒரு திருமணம் தடைப்பட்டசம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.