வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்குக்
காணி வழங்குவதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் மக்களுக்குத்
தெளிவுபடுத்தும் நோக்கில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல்
கோரப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அரச ஊழியர்களுக்குக் காணி வழங்குவதற்காக
ஓமந்தை பகுதியில் 2010ஆம் ஆண்டளவில் அரச ஊழியர் வீட்டுத்திட்டம்
உருவாக்கப்பட்டிருந்தது.
இதன்போது, சுமார் 700இற்கும் மேற்பட்ட காணித்துண்டுகள்
அரச ஊழியர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.
பகிரங்கமாக விண்ணப்பங்கள்
இந்நிலையில், தற்போது மேலும்
219 பேருக்குக் காணித் துண்டுகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கான பயனாளிகள் தெரிவு பட்டியல் வவுனியா பிரதேச செயலகத்தால் தற்போது
வெளியிடப்பட்டுள்ளது. அது தொடர்பான முறைப்பாடுகள் இருக்கும் பட்சத்தில்
எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன் தெரியப்படுத்துமாறு பிரதேச செயலாளரினால்
கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
-
இந்நிலையில், குறித்ததினத்தில் அரச ஊழியர்களிடம் பகிரங்கமாக விண்ணப்பங்கள்
கோரப்பட்டதா எனவும் தகுதியானவர்களுக்குக் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதா என்ற
விடயம் தொடர்பில் அறிவதற்காகத் தனி நபர் ஒருவர் தகவல் உறியும் உரிமைச்சட்டத்தின்
ஊடாக தகவல்களைக் கோரியுள்ளார்.
குறித்த விண்ணப்பத்தில் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்ட
முறை, விண்ணப்பம் விளம்பரப்படுத்தியமைக்கான சான்று, விண்ணப்பம்
கோரியகாலப்பகுதி, கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை உட்பட பல்வேறு
விடயங்கள் குறித்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக கோரப்பட்டுள்ளது.