`வெளிநாட்டில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த ராகுல் காந்தி முயல்கிறார்’ என மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானும், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் கடுமையாகச் சாடினர். இதற்கு பதிலளிக்கும்விதமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, `வெளிநாட்டு பயணத்தின்போது நாட்டுக்கு அவதூறு செய்தவர், பிரதமர் நரேந்திர மோடிதான்’ எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் (ஐ.ஜே.ஏ) ஏற்பாடு செய்திருந்த `இந்தியா இன்சைட்ஸ்’ நிகழ்ச்சியில் பேசுகையில், “கேம்பிரிட்ஜில் நான் நிகழ்த்திய எனது சொற்பொழிவில் இந்தியாவுக்கு எதிரான அவதூறு எதுவும் இல்லை. பிரதமர் மோடி வெளிநாடு சென்றபோதெல்லாம் இந்தியா குறித்து பல்வேறு அவதூறுகளைத் தெரிவித்திருக்கிறார். அதில் கடைசியாக எனக்கு நினைவுக்கு வருகிறதை நினைவுபடுத்துகிறேன். அதாவது, `சுதந்திரம் அடைந்து கடந்த 60-70 ஆண்டுகளில் இந்தியா எதையும் செய்யவில்லை’.
`இந்தியாவில் பல ஆண்டுகளாக வரம்பற்ற ஊழல் நிலவுகிறது’ எனப் பேசியிருக்கிறார். ஒவ்வோர் இந்தியப் பிரஜையையும் அவர் அவமதிக்கவில்லையா… ஆனால் நான் நமது நாட்டை ஒருபோதும் அவதூறு செய்ய மாட்டேன். அதில் எனக்கு ஆர்வமுமில்லை. நான் அதை செய்யவும் மாட்டேன். நான் சொல்வதை பா.ஜ.க-வினர் திரித்துப் பேசுகின்றனர். அது பரவாயில்லை. இந்திய ஜனநாயகம் மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புகளும் அதாவது… நாடாளுமன்றம், பத்திரிகை, நீதித்துறை, நிறுவன கட்டமைப்புகள், சமரசம் செய்யப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.