பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பூ தமிழில் தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இவருக்கு தமிழில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. தமிழ் மொழிபடங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் சினிமாவில் பிரபு-குஷ்பூ ஜோடி பலராலும் ரசிக்கப்பட்டது, இந்த ஜோடி பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் சமீபத்தில் வெளியான அண்ணாத்தே படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் நடித்தது மட்டுமின்றி சில படங்களை தயாரித்தும் இருக்கிறார் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். இதுமட்டுமின்றி இவரு அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார், முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் தற்போது பாஜக கட்சியில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கிறார்.
திரைத்துறை மற்றும் அரசியல் என கலக்கி கொண்டிருக்கும் குஷ்பூ சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். ‘ஆண்கள் பெண்களை இழிவுபடுத்துவது குறித்து குஷ்புவிடம் கருத்து கேட்கப்பட்ட பொது, அவர் தனக்கு நடந்த கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி சிறுவயதில் துன்புறுத்தல் ஏற்பட்டால் அது அவர்களின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்திவிடும். குழந்தைகளை அடிப்பதும், தனது சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் தனது உரிமை என நினைத்து கொண்டிருக்கும் ஆண் தான் எங்கள் குடும்ப தலைவராக இருந்தார்.
என் அம்மா கஷ்டப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன், என் பெயருக்கு பின்னால் தந்தையின் பெயர் வேண்டும் என்பதற்காக மட்டுமே அவர் இருந்தார். என் குடும்பத்தில் இருப்பவர்கள் என் தந்தையோடு பேசினாலும் என்னால் அவரை தந்தையாக நினைக்க முடியவில்லை. 8 வயது முதல் என் தந்தையால் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பல துன்புறுத்தல்களை அனுபவித்தேன். 15 வயது வரை கஷ்டத்தை அனுபவித்த நான், அதற்கு பிறகு எதிர்த்து பேசினேன், அதற்கு பின்னர் அவர் எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எங்களது வாழ்வு மிகவும் கடினமாகிவிட்டது, என் தாயார் தான் எல்லா விதத்திலும் ஆதரவாக இருந்தார்’ என்று கூறியுள்ளார்.