பிரயாக்ராஜ்: உ.பி.யில் எம்எல்ஏ கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஷ் பால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி நேற்று அதிகாலையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ல் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜூ பால், மர்ம நபர்கள் சிலரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மாஃபியாவாக இருந்து அரசியல்வாதியாக மாறியவரும் சமாஜ்வாதி முன்னாள் எம்.பி.யுமான அத்திக் அகமது, அவரது சகோதரரும் முன்னாள் எம்எல்ஏவுமான காலித் அசீம் மற்றும் அவர்களது சகாக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் குஜராத் மற்றும் உ.பி. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் சிறையில் இருந்தபடியே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் எம்எல்ஏ ராஜூ பால் கொலையின் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் உமேஷ்பால், கடந்த 24-ம் தேதி பிரயாக்ராஜில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் 5 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த அவரது 2 பாதுகாவலர்களும் பின்னர் உயிரிழந்தனர். இக்கொலை தொடர்பாகவும் முன்னாள் எம்பி அத்திக் அகமது, அவரது சகோதரர் காலித் அசீம் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து உமேஷ் பால் கொல்லப்பட்ட 72 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளில் ஒருவரான முகம்மது அர்பாஸ் (22) என்பவரை பிரயாக்ராஜ் போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது நடந்த என்கவுன்ட்டரில் அர்பாஸ் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் உமேஷ் பால் கொலையில் மற்றொரு குற்றவாளியான விஜய் குமார் என்கிற உஸ்மான் சவுத்ரியை (27) பிரயாக்ராஜின் கவுந்திரயா பகுதியில் போலீஸார் நேற்று அதிகாலையில் சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸ் என்கவுன்ட்டரில் உஸ்மான் சவுத்ரி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை போலீஸார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உஸ்மான் சவுத்ரி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வழக்கறிஞர் உமேஷ் பாலை முதலில் சுட்டவர் உஸ்மான் சவுத்ரி ஆவார்.