`ஏற்றுமதி தடையை நீக்குங்கள்' பிரதமருக்கு வெங்காயத்தை தபாலில் அனுப்பிய மகாராஷ்டிரா விவசாயிகள்!

மகாராஷ்டிராவில் வெங்காயம் விலை கடுமையான சரிவை கண்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் வெங்காயம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. நடப்பு சீசனில் அதிகப்படியான விளைச்சல் காரணமாக வெங்காயத்தின் விலை வெகுவாக சரிந்துள்ளது. இதனால் நாசிக், புனே, சோலாப்பூர் மாவட்டங்களில் மக்கள் வெங்காயத்தை சாலையோரம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றால் மிகவும் குறைந்த விலையே கிடைக்கிறது. வெங்காயத்திற்கு தகுந்த விலை கிடைக்கவேண்டும் என்று கோரி விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தீவைக்கப்பட்ட வெங்காய தோட்டம்

சில விவசாயிகள் வெங்காயத்தை மார்க்கெட்டிற்கு விற்பனை செய்ய எடுத்துச்சென்றுவிட்டு வெறும் ஒரு சில ரூபாயை மட்டும் வாங்கி வரும் அவலமும் இருந்து வருகிறது. சில வெங்காய மார்க்கெட்களில் வெங்காயத்தை ஏலம் விட விடாமல் தடுத்து விவசாயிகள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருக்கும் தடையை நீக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் தங்களது கோரிக்கையை பிரதமருக்கு தெரிவிக்கும் விதமாக அகமத்நகர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் வெங்காயத்தை தபாலில் பிரதமர் மோடிக்கு அனுப்பி இருக்கின்றனர். சேத்கரி சங்கட்டனா, சேத்கரி விகாஸ் மண்டல் ஆகிய இரண்டு விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வெங்காயத்தை அனுப்பி இருக்கின்றனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், “வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டு இருக்கும் தடையை மத்திய அரசு உடனே நீக்கவேண்டும். இதன் மூலம் விவசாயிகள் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும். கடந்த ஆண்டு விளைவித்து விற்பனை செய்த வெங்காயத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்.

வெங்காய விலை

வெங்காயத்தை விளைவிக்க ஆகும் செலவு அதிகரித்துவிட்டது. பூச்சிக்கொல்லி மருந்து, உரத்திற்கு சர்வதேச மார்க்கெட் நிலவரத்திற்கு தக்கபடி விலை கொடுக்கிறோம். ஆனால் விளைவித்த பொருட்களுக்கு இந்திய மார்க்கெட்டிற்கு தக்கபடி விற்பனை செய்கிறோம்” என்றார். வெங்காயத்திற்கு மிகவும் சொற்ப விலை கிடைப்பதால் அதனை அறுவடை செய்யாமல் அப்படியே தீவைத்து எரிக்கும் சம்பவங்கள் கூட நடக்கிறது. நாசிக் மாவட்டத்திற்கு வந்த மத்திய அமைச்சர் பாரதி பவாரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டமும் நடத்தினர்.

நாசிக் மாவட்டம் மதுல்தான் என்ற கிராமத்தில் கிருஷ்ண டோங்கிரே என்ற விவசாயி ஒன்றரை ஏக்கரில் வெங்காயம் பயிரிட்டு இருந்தார். அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. அதில் 125 குவிண்டால் அளவுக்கு வெங்காயம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் திடீரென வெங்காயத்தை அறுவடை செய்யாமல் அப்படியே தீவைத்து எரித்துவிட்டார். மார்க்கெட்டில் தகுந்த விலை கிடைக்காது என்பதால் இம்முடிவை எடுத்ததாக டோங்கிரே தெரிவித்தார். இதனை விளைவிக்க 1.5 லட்சம் செலவு செய்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாசிக் வெங்காய மார்க்கெட்

வெங்காயத்தை அறுவடை செய்ய 35 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு பிடிக்கும். வெங்காயத்தை விற்பனை செய்வதன் மூலம் அறுவடைக்கு ஆகும் செலவைக்கூட எடுக்க முடியாது என்பதால் தீ வைத்து எரித்துவிட்டேன் என்று தெரிவித்தார். தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.2-4 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் ஒரு கிலோ வெங்காயம் 18 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் இப்போது விளைவிக்க பயன்படுத்திய செலவைக்கூட எடுக்க முடியவில்லை என்று விவசாயிகள் குற்றம் சட்டியுள்ளனர். சில விவசாயிகள் தங்கள் நிலத்தை அரசு வாங்கிக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.