தமிழக பாஜகவில் யாதவ சமுதாயத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லை..!!
கடந்த சில நாட்களாக தமிழக பாஜகவில் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் விலகி வருகின்றனர். நேற்று முன்தினம் தமிழக பாஜகவின் ஐடி விங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அக்கட்சியில் இருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து அவர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அதேபோன்று நேற்று தமிழக பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரால் செயல்படும் வாரும் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் இன்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது இல்லத்தில் சந்தித்த பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன், பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணை தலைவர் விஜய், பாஜக முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் சதீஷ்குமார் யாதவ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இது குறித்து அவர் தரப்பிலிருந்து வெளியானதாக கூறப்படும் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அந்த கடிதத்தில் “நான் மிகவும் வருத்தத்துடன் எனது இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் பணியை ராஜினாமா செய்து கொள்கிறேன். இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோனார் குருபூஜைக்கு மாநில தலைவர் நேரில் சென்று மரியாதை செலுத்தப்படாதது, மாநில மையக்குழுவில் யாதவர் சமுதாயத்திற்கு பல ஆண்டுகளாக இடம் மறுக்கப்பட்டு வருவது, கடந்த பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒரு யாதவருக்கு கூட போட்டியிட வாய்ப்பளிக்காதது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலயங்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க சீவலப்பேரி சிதம்பரம் என்கிற துரை, மாயாண்டி மற்றும் வேலச்செவல் கிருஷ்ணர் கோனார் ஆகியோர் பலியானார்கள். அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு அறப்போராட்டம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை நேரில் சென்று ஆறுதல் கூட தெரிவிக்காதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இது போன்ற விஷயங்கள் என்னுடைய பல நாள் வருத்தங்கள் பின்வரும் நாட்களில் உரிய அங்கீகாரம் எங்கள் சமுதாயத்திற்கு கிடைக்கும் என நம்புகிறேன். என்னுடைய வருத்தத்தை மாநில தலைமைக்கு தெரியப்படுத்துங்கள்” என பாஜகஸமாவட்ட தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. தமிழக பாஜகவில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் விலகுவது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.