கோலார்:கோலார் மாவட்டத்தில், ‘சீட்’ பெறுவதில் முக்கிய கட்சிகளில் கடும் போட்டா போட்டி நிலவுகிறது. இதனால், வேட்பாளர்களை தீர்மானிக்க முடியாமல் காங்., – பா.ஜ., தலைவர்கள் திணறி வருகின்றனர்.
கர்நாடகாவின், ‘ஹைவோல்டேஜ்’ தொகுதிகளில், கோலார் தொகுதியும் ஒன்றாகும். இம்முறை இதே தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடுவதாக அறிவித்த பின், அனைவரின் பார்வையும், கோலார் மீது பதிந்துள்ளது. சித்தராமையாவும் பலமுறை தொகுதிக்கு வந்து சென்றார்.
பனிப்போர்
கோலாரில் முனியப்பா, முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் இடையே பனிப்போர் நிலவுகிறது. சித்தராமையா போட்டியிடுவதால், இவ்விரு தலைவர்களின் மோதல் முடிவுக்கு வந்தது போன்று தோன்றினாலும், நீறுபூத்த நெருப்பாக உள்ளது.
வர்த்துார் பிரகாஷ், ‘நானே பா.ஜ., வேட்பாளர்’ எனக் கூறி, பிரசாரம் செய்கிறார். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ வேட்பாளரை, பா.ஜ., இன்னும் அறிவிக்கவில்லை. காங்கிரசில் மட்டுமின்றி, பா.ஜ.,விலும் கூட கோஷ்டி பூசல் உள்ளது. சீட் கோரி, பாரம்பரிய பா.ஜ.,வினர், வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் இடையே, விரிசல் அதிகரித்துள்ளது.
கோலார் எம்.பி., முனிசாமி ஆதரவாளர் ஓம்சக்தி சலபதி, சீட் எதிர்பார்க்கிறார். மற்றொரு பக்கம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முனிரத்னா ஆதரவாளர் வர்த்துார் பிரகாஷ் போட்டியிட ஆர்வம் காண்பிக்கிறார். இவர்களை சமாதானம் செய்யும் முயற்சி பலனளிக்கவில்லை.
ஓம்சக்தி சலபதி, வர்த்துார் பிரகாஷ் மட்டுமின்றி, விஜயகுமார், ம.ஜ.த.,வில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்த மஞ்சுநாத் கவுடாவும் கூட, சீட் கேட்டு பிடிவாதம் பிடிக்கின்றனர். இத்தகைய பூசல், தேர்தலின் போது பிரச்னையை அதிகரிக்கும் என, தலைவர்கள் அஞ்சுகின்றனர். எனவே கோஷ்டி பூசலை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
தங்கவயல் தொகுதி
தங்கவயல் தொகுதியிலும், பா.ஜ., சீட்டுக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. 2018ல் போட்டியிட்டு தோல்வியடைந்த அஸ்வினி சம்பங்கி, இம்முறையும் சீட் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கிடையில் எம்.பி., முனிசாமியின் ஆதரவாளர் சம்பங்கியும், அமைச்சர் முனிரத்னாவின் ஆதரவாளர் மோகன் கிருஷ்ணாவும், இதே தொகுதியில் சீட்டுக்காக ‘லாபி’ நடத்துகின்றனர்.
பங்கார்பேட் தொகுதியில், வெங்கட முனியப்பா, நாராயணசாமி, மகேஷ், சேஷு உட்பட நான்கைந்து பேர்சீட் கேட்கின்றனர். கோலார் மாவட்டத்தின், ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ., காங்கிரசில் சீட்டுக்கு, முட்டி மோதுகின்றனர்.
சத்திய பிரமாணம்
கோஷ்டி பூசலை சரி செய்யும் முயற்சியில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் முனிரத்னா ஈடுபட்டுள்ளார். சீட் கேட்போருடன் கூட்டம் நடத்தினார். கட்சி யாருக்கு சீட் கொடுத்தாலும், ஒற்றுமையாக பணியாற்றி, அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என, அறிவுரை கூறினார். கட்சிக்கு எதிராக செயல்படுவதில்லை என, கோலாரம்மன் மீது சத்திய பிரமாணம் செய்ய வைத்துள்ளார்.
மற்றொரு பக்கம், சித்தராமையா போட்டியிடுவதாக அறிவித்த பின், கோலார் காங்கிரசார் சுறுசுறுப்படைந்துள்ளனர். அவரை வெற்றி பெற வைக்க, ஒரு கோஷ்டியும், தோற்கடிக்க இன்னொரு கோஷ்டியும் தீயாக வேலை செய்து வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்