பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம் திமுகவின் தொலைக்காட்சி ஒன்றில் மாணவர்களிடையே பாஜக, ஆர்.எஸ்.எஸ் அரசியலை பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டு அரசியலில் முன்னெப்போதையும் விட மதவாத சக்திகள் ஊடுருவ முயல்கின்றன என்று அரசியல் விமர்சகர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் திமுக நிர்வாகிகளிடம் பேசும் போது தமிழ்நாட்டில் சாதி மோதல்கள், மத மோதல்களை ஏற்படுத்தி சிலர் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி திமுக அரசை அகற்றுவதற்கு சதி செய்து வருகின்றனர் என்று வெளிப்படையாக கூறினார்.
ஆனால் திமுகவின்
குழும தொலைக்காட்சிகளில் ஒன்றான சித்திரம் தொலைக்காட்சியில் மாணவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பட்டது. அதில் பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம் என்பவர் கலந்து கொண்டு மத சார்பற்ற அரசியலுக்கு எதிரான கருத்துக்களையும், சிறுபான்மையினர் விரோத அரசியலையும் பேசினார்.
ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ திருச்சபைகளின் தலையீடு அதிகமாக இருக்கும். அரபு நாடுகளில் இஸ்லாமிய அமைப்புகளின் தலையீடு அதிகமாக இருக்கும். அதாவது பெரும்பான்மை மதங்களின் ஆதிக்கம் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் இது நேர்மாறாக உள்ளது. இங்கு 75 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள இந்து மதத்தை வாக்கு வங்கி அரசியலுக்காக தூக்கிவீசும் கான்செப்டை சில அரசியல் கட்சிகள் செய்கின்றன. பிரதான மதமான இந்து மதத்தை காப்பதற்கு போராட வேண்டிய நிலைமை இங்கு இருக்கிறது.
எல்லா மதத்தவர்களுக்கும் அவர்களது வழக்கங்களை இந்திய அரசியலைமப்புக்குள் பின்பற்ற உரிமை இருக்கிறது. தீவிரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளை அரசு தடைவிதித்தால் அதில் கூட நாம் எவ்வாறு பலன் பெற முடியும் என்று பார்க்கக்கூடிய தீய அரசியல் சக்திகள் இருக்கின்றன. இதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் தங்களது அரசியல் மேடைகளில் இந்து Vs இஸ்லாம் என்று பேசுவதையே மாணவர்களிடையே வினோஜ் பேசியுள்ளார். அது திமுகவின் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாவது மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. திமுக பேசும் மதச்சார்பின்மைக்கு எதிராக பாஜககாரர் பேசுவதற்கு மேடை போட்டு கொடுப்பது என்ன மாதிரியான அரசியல் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதே திமுகவின் தொலைக்காட்சிகளில் இந்துத்துவத்தை எதிர்க்கும் சிந்தனையாளர்கள், பேச்சாளர்கள், களச் செயற்பாட்டாளர்கள் பங்குபெறும் தொலைக்காட்சி விவாதமோ, நிகழ்ச்சியோ நடத்தப்படாத நிலையில் பாஜகவுக்கு மட்டும் வாசல் திறந்து வைப்பது ஏன் என்று பெரியாரிய அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றனர்.