ஈரோடு: வர்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை வட இந்தியர்களால் ஈரோட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து சமூகத்தால் கொண்டாடப்படும் மிகவும் வண்ணமயமான ஹோலி பண்டிகை, நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த வண்ணங்களின் திருவிழா, நீண்ட குளிர்காலத்திற்குப் பிறகு வசந்த காலம் பூப்பதைக் குறிக்கிறது. இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை ஈரோட்டில் இருக்கும் வடமாநிலத்தவர்கள் நேற்று இரவு முதலே உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஈரோட்டில் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, மொடக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தங்கி உள்ளனர். குறிப்பாக பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வட மாநிலத்தவர்களின் முக்கியமான பண்டிகையான ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்காக ஈரோட்டில் தங்கியிருந்த வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று விட்டனர். மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் இந்திரா நகர், கருங்கல் பாளையம், கே.எஸ்.நகர், திருநகர் காலனி, வளையகார வீதி, வி.வி.சி.ஆர். நகர், அக்ரஹார வீதி போன்ற பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் இனிப்புகளை வழங்கியும் ஹோலியை கொண்டாடினர்.