புதுடெல்லி: ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது நாளை முழுவதும் நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்யப் போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (மார்ச் 7) வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நாட்டில் நடக்கும் விவகாரங்கள் மிகவும் கவலையளிக்கிறது. அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் மோசமான நிலையில் இருப்பது அனைவருக்கும் அறிந்தததே. ஆனால், மணிஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின் ஆகிய இருவரும் அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த முயன்றனர்.
மக்களுக்கு நல்ல கல்வியும் நல்ல சுகாதார வசதிகளும் கிடைக்க நினைத்தவர்களை சிறையில் அடைக்கும் பிரதமர், நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் கவலை அளிக்கிறது. அதனால் நான் உடனடியாக நாளை நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்ய இருக்கிறேன். நீங்களும் பிரதமர் நரேந்திர மோடி தவறு செய்கிறார் என்று நினைத்தால், நாட்டின் நலன் பற்றி நீங்களும் கவலை கொண்டால், நாளை ஹோலி கொண்டாட்டத்திற்கு பின்னர் கொஞ்சம் நேரம் ஒதுக்கி நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
நான் அவர்கள் இருவரைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் நாட்டிற்காக தங்களின் உயிரையும் கொடுப்பார்கள். அவர்களின் மன உறுதியை யாராலும் குலைக்க முடியாது. நான் நாட்டின் நலனை நினைத்து கவலைப்படுகிறேன். சாமானியர்களுக்காக உழைக்கவோ, அவர்களின் குறைகளை கேட்கவோ இங்கே யாரும் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னர், ஒருவர் வசதியானவர்களுக்கு கிடைக்கும் கல்வியை ஏழைகளுக்கு கிடைக்கச் செய்கிறார். அவர் மணிஷ் சிசோடியா. நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் இருக்கும் நிலை அனைவருக்கும் தெரியும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து ஒருவர் சுகாதாரத்தின் நிலையை மாற்றி நாட்டிற்கு ஒரு நல்ல சுகாதார மாதிரியை தந்தார். அந்த நபர் சத்தியேந்திர ஜெயின். ஆனால் அவர்கள் இருவரும் பொய்வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சத்தியேந்தர ஜெயின் பணமோசடி குற்றச்சாட்டிற்காக கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மணிஷ் சிசோடியாவை பிப்.26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இவர்கள் இருவரும் ஆம் ஆத்மியின் அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்தனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தங்களின் பொறுப்பகளை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அரவிந்த கேஜ்ரிவால், அவர்களின் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம்சாட்டி வருகிறார். .