சென்னை/ தாம்பரம்: தமிழகத்தில் பிஹார் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது வேதனை தருவதாக, சென்னை வந்த லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார். போலி வீடியோ பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தார்.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், அவர்களது நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக பிஹாரில் இருந்து லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) தேசியத் தலைவரும், ராம்விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான் எம்.பி. நேற்று சென்னை வந்தார். பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பிஹார் மாநில தொழிலாளர்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிஹாரில் இருந்து அதிக அளவிலான தொழிலாளர்கள் தமிழகத்தில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு இங்கு அச்சுறுத்தல் இருப்பது வேதனை அளிக்கிறது. குறிப்பாக, தாங்கள் தாக்கப்படுவது தொடர்பாக கோவையில் இருந்து பல தொழிலாளர்கள் என்னிடம் போனில் தெரிவித்தனர். தொழிலாளர்கள் தாக்கப்படுவது பொய்யான வீடியோ என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
அது மட்டுமின்றி, பிஹார் மக்கள் பாதிக்கப்படும்போது, பிஹார் மாநில அரசுதான் முதலில் குரல்கொடுத்திருக்க வேண்டும். ஆனால், எங்கள் முதல்வர் இதை சரியாக கையாளவில்லை. தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை. கண் துடைப்புக்காக ஒருகுழுவை அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அவர்கள் சந்திக்கவே இல்லை. தமிழக அரசு கொடுத்த அறிக்கையையே அவர்களும் தெரிவிக்கின்றனர்.
இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. நாட்டின் எந்த மாநிலத்திலும், எந்த இடத்திலும் சென்று பணியாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில், பிஹார் மக்கள் தமிழகத்தில் அச்சமின்றி பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, பிஹார் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக மனு அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், ‘‘தமிழகத்தில் பிஹார் மக்கள் தாக்கப்படுவதாக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து விசாரணை நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். வலைதளங்களில் வீடியோ பரப்பியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக வாழும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து பேச முயற்சி செய்தேன். எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை” என்றார். கட்சியின் துணைத் தலைவர் அஷ்ரப் அன்சாரி, தலைமைப் பொதுச் செயலாளர் சஞ்சய் பாஸ்வான், தமிழக தலைவர் ச.வித்யாதரன் உடன் இருந்தனர்.