மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கடந்த ஆண்டு ஜூலை மாதம், மர்ம நபர் ஒருவர் தங்களது போலி ஆபாச வீடியோவை காட்டி மிரட்டுவதாக கூறி போலீஸில் புகார் செய்தனர். தங்களது சோசியல் மீடியாவில் இருக்கும் படங்களை பயன்படுத்தி போலி ஆபாச வீடியோ தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் புகாரில் தெரிவித்தனர்.
மிரட்டல் விடுக்கும் நபர் 500 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை கேட்பதாகவும், பணம் கொடுத்தால் வீடியோவை அழித்துவிடுவதாகவும் மர்ம நபர் தெரிவித்திருக்கிறார். பெண்கள் தொடர்ச்சியாக புகார் கொடுத்ததால், இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் குஜராத் மாநிலம் காந்தி நகரை சேர்ந்த 19 வயது வாலிபர் இது போன்ற மிரட்டலை விடுத்திருப்பது தெரிய வந்தது. மும்பை போலீஸாரும் காந்தி நகர் போலீஸாரும் இணைந்து அந்த நபரை கைது செய்தனர். அவரின் பெயர் ஆதித்யா பிரசாந்த் என்று தெரிய வந்தது.
பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டுவிட்டு காந்தி நகரில் மாஸ்க் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் அந்த நபர் வேலை செய்து வந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் 39 பெண்களை மிரட்டி பணம் வசூலித்திருப்பது தெரிய வந்தது. 39 பெண்களில் அதிகமானவர்கள் இந்த மோசடி குறித்து பேச மறுக்கின்றனர். ஆனாலும் 22 பெண்கள் புகார் கொடுக்க முன் வந்துள்ளனர். போலி ஆபாச வீடியோ பிரச்னையால் சில பெண்கள் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றதாக அண்டாப் போலீஸ் இன்ஸ்பெக்டர் குல்கர்னி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சோசியல் மீடியாவில் நுழையும் ஆதித்யா அதில் இருக்கும் பெண்களிடம் தனது வேலையை காட்டியுள்ளார்.
டி.பியில் தங்களது புகைப்படத்தை வைத்திருக்கும் பெண்களை மட்டும் தேர்வு செய்து அவர்களின் போலி வீடியோ தயாரித்து மிரட்டியுள்ளார். இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது குற்றவாளியும் ஜாமீனில் இருக்கிறார்” என்றார். குஜராத்தில் சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.