மதுரை: மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடந்தது. இதில் பேசிய முதல்வர், ‘‘பெரும் நம்பிக்கையோடு மக்கள் மனுக்களை அளிக்கின்றனர். அவர்கள் வழங்கும் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல. அது ஒருவரது வாழ்க்கை, கனவு, எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.
‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ், முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று நிர்வாகப் பணி, வளர்ச்சிப் பணி, நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களின் ஆட்சியர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்களை அரசு வகுத்து வருகிறது. கிராமப்புற மக்களின் வருமானத்தை பெருக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஆட்சியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிதிட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு வேலைவழங்கப்படும் சராசரி நாட்களை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்ட தொகையை விரைந்து முழுமையாக செலவிட்டு, பணிகளை துரிதப்படுத்துங்கள்.
சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், அரசு மருத்துவமனைகளை நாடும் ஏழை மக்கள், அரசுப் பள்ளிகள், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகள், திருநங்கைகள் ஆகியோரின் தேவைகள், குறைகளை அறிந்து, அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றி தரவேண்டியது நம் அனைவரது கடமை.
பட்டா மாறுதல், பட்டாக்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குதல் ஆகியவற்றிலும் மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ஒருவர் சான்றிதழ் கோரி மனு கொடுத்தால், சட்டத்தில் வகுக்கப்பட்ட கெடுவுக்குள் அந்த சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அல்லது, ஏன் வழங்க இயலாது என்பதற்கான தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட வேண்டும். இதை அரசுத்துறை செயலர்களும், துறை தலைவர்களும், ஆட்சியர்களும் உறுதி செய்யவேண்டும். அடுத்த ஆய்வுக் கூட்டத்தின்போது இதை கட்டாயம் சரிபார்ப்பேன்.
நிறைவேறும் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்புடன் மக்கள் உங்களை நாடி வந்துமனுக்களை வழங்குகின்றனர். அவர்களை பொருத்தவரை நீங்கள்தான் அரசு.எனவே, உங்களால் இயன்றவரை அந்த பிரச்சினையை சரிசெய்யவோ, தேவையை பூர்த்தி செய்யவோ முயற்சி எடுக்க வேண்டும்.
மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல. அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். ஒருவர் நியாயமாக கோருவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை. ஆட்சியர்களின் சிறப்பான செயல்பாட்டுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சக்கரபாணி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, முதல்வரின் தனிச் செயலர் உதயச்சந்திரன் மற்றும் அரசு துறைச் செயலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.