காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்துள்ள திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் வீட்டில் மின்கசிவு காரணமாக, தீவிபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில், தீவிபத்து காரணமாக வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
அப்போது உண்டான தீ அருகிலிருந்த குடிசையின் மேல் விழுந்தது. தீ அடுத்தடுத்து அருகிலிருந்த 21 குடிசைகளில் மளமளவெனப் பரவியது. பல குடிசைகள் பற்றியெரிந்ததினால், அங்கு ஏற்பட்ட புகை அந்த பகுதி முழுவதும் பரவியது. இந்த தீவிபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்துக்குத் தாம்பரம், குரோம்பேட்டை பகுதியிலிருந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் வந்தனர்.
இருந்தபோதிலும், அங்கிருந்த 21 குடிசை வீடுகளில் தீயில் எரிந்துபோனது. மேலும், அந்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐந்து பைக்குகள், வீட்டிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டு உபயோகப்பொருட்கள் அனைத்தும் நாசமாகின. இந்த தீ விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
மேலும், தீ விபத்து குறித்துத் தகவலறிந்ததும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து பார்வையிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்கள். அதுமட்டுமின்றி, வருவாய்த் துறையினர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைச் சேகரித்ததுடன், அவர்களை முகாம்களின் தங்கவைக்க நடவடிக்கையும் எடுத்தனர். தீ விபத்தில் பலரும் வீட்டை இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.