பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்ய ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ.வின் அலுவலகத்தில் வைத்து, மாடால் விருபாக்ஷப்பாவின் மகனும், அரசு அதிகாரியுமான பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அலுவலகம் மற்றும் வீட்டில் ரூ.7.72 கோடி சிக்கி இருந்தது. இந்த லஞ்ச வழக்கு தொடர்பாக மாடால் விருபாக்ஷப்பா, பிரசாந்த் உள்பட 5 பேர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தன் மீது வழக்குப்பதிவு என அறிந்ததும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பா தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய லோக் அயுக்தா போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி மாடால் விருபாக்ஷப்பாவுக்கு லோக் அயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்திருந்தார்கள். அவரது வீடு மற்றும் எம்.எல்.ஏ. அலுவலகத்திலும் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜரானால் மாடால் விருபாக்ஷப்பா கைது செய்யப்படலாம். அதனால், அவர் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டது. அதே நேரத்தில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கர்நாடக ஐகோர்ட்டில் மாடால் விருபாக்ஷப்பா சார்பில் நேற்று முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டது. முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவுக்கு ரூ.5 லட்சம் பிணை தொகை மற்றும் உத்தரவாதத்துடன் கூடிய நிபந்தனையின் பேரில் இடைக்கால ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
அவர் 48 மணிநேரத்தில் லோக்அயுக்தா முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதே நேரத்தில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பதற்கான ஆதாரங்களை திரட்டி வரும் லோக் அயுக்தா போலீசார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாடால் விருபாக்ஷப்பா மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.