புதுடெல்லி: வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்து லிபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தவித்து வந்த 12 இந்தியர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டுள்ளது.
பஞ்சாபிலுள்ள 12 பேருக்கு துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி சிலர் லிபியாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அங்கு அவர்கள் கொத்தடிமை போல வேலை செய்து வந்தனர்.
இதுதொடர்பான புகார் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு (என்சிஎம்) வந்தது. இதையடுத்து சிறுபான்மையினர் ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்து 12 பேரையும் மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது.
இதுகுறித்து தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் இக்பால் சிங் லால்புரா கூறியதாவது: பஞ்சாபைச் சேர்ந்த 12 பேரை ஆசை வார்த்தை கூறி துபாய்க்கு அழைத்துச் செல்வதாக சில ஏஜண்டுகள் தெரிவித்துள்ளனர். அதை நம்பி பணத்தைச் செலுத்தி இவர்கள் சென்றுள்ளனர். ஆனால் அந்தமோசடி பேர்வழிகள் அவர்களைதுபாயிலிருந்து லிபியாவுக்கு அழைத்துச் சென்று கொத்தடிமை களாக விற்றுவிட்டுத் தப்பிவிட்டனர்.
பஞ்சாப் மாநில அரசு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
துனீசியாவில் உள்ள இந்திய தூதரகம் அதிரடியாக செயல்பட்டு 12 பேரையும் மீட்டது. இவர்கள் 2 பிரிவுகளாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா திரும்பினர். மீட்கப்பட்ட 12 பேரில் 10 பேர் பஞ்சாபையும், ஒருவர் பிஹாரையும், மற்றொருவர் இமாச்சல் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மீட்கப்பட்ட பஞ்சாபை சேர்ந்த ஜமாலுதீன் கூறியதாவது: துபாயில் நல்ல சம்பளம் என்று கூறி அழைத்துச் சென்றனர். நாங்கள் கடன் வாங்கி பணத்தை செலுத்தி துபாயில் பணிபுரியலாம் என்ற ஆசையில் சென்றோம். ஒவ்வொருவரும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்து துபாய் சென்றோம்.
துபாய்க்கு சென்றதும் தற்போது இங்கு வேலை இல்லை. எனவே இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள். இல்லாவிட்டால் லிபியாவில் வேலை இருக்கிறது. அங்கு வேலை செய்யுங்கள் என்று கூறினர். இதனால் நாங்கள் வேறு வழியின்றி லிபியா நாட்டுக்கு சென்றோம்.
அங்கு எங்களை கொத்தடிமை களாக ஒரு கட்டிட வேலையை நடத்தும் நிறுவனத்துக்கு விற்று விட்டு ஏஜண்டுகள் தப்பிவிட்டனர். சம்பளமே இல்லாமல் நாங்கள் அந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தோம். மேலும் எங்களுக்கு சரியாக உணவும் தரவில்லை. கேள்வி கேட்டால் எங்களை கொன்று விடுவதாக மிரட்டினர். மேலும் எங்களை அடித்து துன்புறுத்தவும் செய்தனர். எங்களை மீட்டுக் கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி.
இவ்வாறு ஜமாலுதீன் கூறினார்.