சட்டோகிராம்,
இங்கிலாந்து – வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 48.5 ஓவர்களில் 246 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (50 ரன்), விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (70 ரன்), ஷகிப் அல்-ஹசன் (75 ரன், 71 பந்து, 7 பவுண்டரி) அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் (19 ரன்), பில் சால்ட் (35 ரன்) முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தும் மிடில் வரிசை தடுமாற்றத்திற்கு உள்ளானது. டேவிட் மலான் டக்-அவுட் ஆனார். சாம் கர்ரன் (23 ரன்), கேப்டன் ஜோஸ் பட்லரும் (26 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை. அந்த அணி 43.1 ஓவர்களில் 196 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேசம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்காளதேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஒரு நாள் போட்டியில் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் வங்காளதேச வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அத்துடன் 35 வயதான ஷகிப் அல்-ஹசன் 6,976 ரன்களும் (227 ஆட்டம்) எடுத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன் மற்றும் 300 விக்கெட் இரண்டையும் கடந்த 3-வது வீரராக சாதனையாளர் பட்டியலில் இணைந்தார். இதற்கு முன்பு இலங்கையின் சனத் ஜெயசூர்யா, பாகிஸ்தானின் சாஹித் அப்ரிடி ஆகியோர் இந்த இலக்கை கடந்துள்ளனர்.
வங்காளதேசத்துக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் இங்கிலாந்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 9-ந்தேதி இதே மைதானத்தில் நடக்கிறது.