புதுடெல்லி: வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகி பிரசாந்த் உம்ராவ், அடுத்த பத்து நாட்களில் சம்பந்தப்பட்ட தமிழக நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது ெசய்ய தமிழக தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ள நிலையில், பிரசாந்த் உம்ரா இடைக்கால முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 12 வார காலம் இடைக்கால முன்ஜாமீன் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஹெக்டே மற்றும் ஜோசப் அரிஸ்டாட்டில், ‘இந்த விவகாரத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் வகையில் தவறான செய்திகளை பிரசாந்த் உம்ராவ் பரப்பி வருகிறார். அதனால் பிரசாந்த் உம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்க கூடாது. மேலும் அவரை தமிழ்நாடு காவல்துறையிடம் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘இந்த விவகாரத்தில் பிரசாந்த் உம்ராவுக்கு 12 வார காலம் இடைக்கால முன்ஜாமீன் வழங்க முடியாது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பத்து நாட்களுக்குள் அதாவது மார்ச் 20ம் தேதிக்குள் அவர் ஆஜராக வேண்டும். அங்குள்ள நீதிமன்றத்தில் அவர் முறையிட்டு நிவாரணம் கேட்கலாம்’ என்று உத்தரவிட்டனர்.