புதுடெல்லி: கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் போலி செய்திகளும், காட்சிப்பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
பூதாகரமாக வெடித்த இந்த பிரச்சினையில் பிஹார் மற்றும் தமிழ்நாடு அரசுகள் தலையிட்டு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிஹார் அரசு அதிகாரிகள் குழு ஒன்று தமிழகத்துக்கு சென்று அங்குள்ள பிஹார் மாநில தொழிலாளர்களிடம் ஆய்வும் நடத்தியது. அப்போது தமிழகத்தில் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பிஹார் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதனால் நிலைமை திருப்திகரமாக இருக்கிறது என்று பிஹார் அரசு குழுவும் தெரிவித்தது.
இந்த சூழலில் கடந்த மார்ச் 4-ம் தேதியிட்ட தைனிக் ஜாக்ரண் நாளிதழ் செய்தி என்ற பெயரில் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு பரவியது. அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஓர் அறிக்கையும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படத்துடன் ஓர் அறிக்கையும் இடம் பெற்றிருந்தது. அந்த போலி செய்தி பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரப்பப்பட்டதால் சர்ச்சைகள் எழுந்தன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் தைனிக் ஜாக்ரணின் உத்தர பிரதேச செய்திக் குழுவின் தலைவர் அசுதோஷ் சுக்லா கூறியதாவது: எங்கள் நாளேட்டின் பெயரில் இருமாநில முதல்வர்களின் அறிக்கை என்ற வகையில் வெளியான போலி செய்தி குறித்த தகவல் எங்கள் கவனத்துக்கும் வந்தது. இதுபோல் எங்கள் நாளேட்டின் பெயரில் பல வகையான போலிசெய்திகள் வெளியாவது அதிகரித்து வருகிறது.
இவை ஒவ்வொன்றுக்கும் ‘அது எங்கள் செய்தி அல்ல’ என மறுப்பு அளிப்பது சிரமமான காரியம். ஏனெனில், எங்கள் பெயரில் யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?. எனினும், இதுதொடர்பாக எங்களை தொடர்பு கொண்டு கேட்பவர்களுக்கு சமூகப் பொறுப்புடன் பதில் அளித்து வருகிறோம். இவ்வாறு அசுதோஷ் சுக்லா விளக்கம் அளித்தார்.