புதுடெல்லி,
இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர் 34 வயதான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்டுகளில் 5 இன்னிங்சில் ஆடி வெறும் 111 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் நாளை மறுதினம் தொடங்கும் கடைசி டெஸ்டில் ரன்குவிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்.
இந்த நிலையில் கோலியின் பார்ம் குறித்து கவலைப்பட தேவையில்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு அளித்த பேட்டியில், ‘விராட் கோலி குறித்து ஏற்கனவே பல முறை சொல்லி இருக்கிறேன். சாம்பியன் பேட்ஸ்மேன்கள் எப்போதும் எப்படி பழைய நிலைக்கு திரும்புவது என்று வழிமுறையை கண்டுபிடித்து விடுவார்கள். தற்சமயம் கோலிக்கு கொஞ்சம் ரன்வறட்சி ஏற்பட்டு இருக்கலாம். நமது எதிர்பார்ப்புக்கு ஏற்ப ரன் குவிக்காமல் இருக்கலாம். ஒரு பேட்ஸ்மேனாக ரன் எடுக்க தடுமாறும் போது, உங்களை பற்றி நீங்கள் நன்கு அறிந்து கொள்வீர்கள். அதனால் விராட் கோலியின் ஆட்டத்திறன் குறித்து எனக்கு கவலையில்லை. ஏனெனில் அவர் மீண்டும் பார்முக்கு வந்து ரன் குவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் நான் எந்த பேட்ஸ்மேனின் ஆட்டத்திறன் பற்றியும் கண்டுகொள்ளப்போவதில்லை. காரணம், பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் ஒரு கெட்டகனவாக இருக்கிறது. முதல் இரு டெஸ்டுகளில் தோற்ற ஆஸ்திரேலியா சரிவில் இருந்து மீண்டு வந்து 3-வது டெஸ்டில் வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது.
இங்குள்ள ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது மிக, மிக கடினம் என்பது தெரியும். களத்தில் பந்து நன்கு சுழன்று திரும்புவதால் மட்டுமல்ல, பந்து தொடர்ந்து சீரற்ற வகையில் பவுன்ஸ் ஆகிறது. இப்படிப்பட்ட ஆடுகளத்தில் விளையாடும் போது நம்பிக்கையை இழந்து விடுவீர்கள். இதே மாதிரியான ஆடுகளத்தன்மை தொடர்ந்தால், உண்மையிலேயே பேட்டிங் செய்வது சிரமம்’ என்றார்.