புதுடெல்லி: சுகாதாரத் துறையில் இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைத்து தன்னிறைவு பெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வு தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கலந்துரையாடல் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:
நீண்ட காலமாக ஒருங்கிணைந்த அணுகுமுறை மற்றும் தொலைநோக்குப் பார்வை இல்லாததால் இந்தியாவின் சுகாதாரத் துறை பாதிக்கப்பட்டது. ஆனால்எனது அரசில் சுகாதார அமைச்சகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த துறைகளும் இதனை ஒருங்கிணைந்து அணுகியுள்ளது.
இந்தியா எந்தவொரு தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்ய வேண்டிய தேவையின்றி அதில் தன்னிறைவு பெறுவதை நமது தொழில்முனைவோர் உறுதிசெய்ய வேண்டும். மருத்துவத் துறையில் தொழில்முனைவோரை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சுகாதாரத்துறையில் இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது.
மருத்துவ செலவுகளை குறைப்பற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ மற்றும் குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படும் ‘ஜன் ஆஷாதி’ மையங்கள் மூலம் முறையே ரூ.80,000 கோடி மற்றும் ரூ.20,000 கோடி வரை மக்களால் சேமிக்கப்படுகிறது.
கரோனா தொற்றுநோய் காலத்தில் நமது நாட்டின் மருந்துத் துறை உலகளாவிய நம்பிக்கையை பெற்றது, இந்த நம்பிக்கையை முதலீடாக்கி இத்துறையை வளர்ச்சி பெறச் செய்யவேண்டும்.
சுகாதாரத் துறையை கரோனாவுக்கு முந்தைய காலம், கரோனாவுக்கு பிந்தைய காலம் என பிரித்துப் பார்க்க வேண்டும். வளர்ந்த நாடுகளின் மேம்பட்ட நடைமுறைகள் கூட இத்தகைய நெருக்கடியில் அழிந்ததை கரோனாதொற்றுநோய் நமக்கு காட்டியது.
உயிர் காக்கும் மருத்துவ சிகிச் சைக்கான கட்டமைப்பு தற்போது சிறிய நகரங்கள் மற்றும் சிறிய வாழ்விடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு சுகாதார சுற்றுச்சூழலுக்கான வளர்ச்சிக்கு இது வழிவகுக்கிறது, மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே பரிசோதனை வசதிகள் மற்றும் சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.