அதானி குழுமம்- ஹிண்டன்பர்க் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சப்ரே தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழுவில், கே.வி.காமத், நந்தன் நீலகேனி, முன்னாள் நீதிபதிகள் ஓ.பி.பட், ஜே.பி.தேவ்தத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிபுணர் குழு பங்குச்சந்தையின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழிமுறைகளையும், தற்போது பங்குச்சந்தைகளுக்கு உள்ள கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் பரிந்துரைகளை அளிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிபுணர் குழு இரண்டு மாதத்திற்குள் தனது அறிக்கையை அளிக்கும் எனத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி, மத்திய அரசு, நிதி அமைப்புகள் மற்றும் செபி தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை அதானி நிறுவனங்களுக்கு எதிராக பங்குச்சந்தை முறைகேடு, சட்ட விரோத பரிவர்த்தனை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்தததை அடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சி அடைந்தன. இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதே நேரத்தில், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், கடந்த மாதம் 17-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு மற்றும் செபி அமைப்பு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான விசாரணைக்கான செபியின் பரிந்துரையைச் சீலிட்ட கவரில் நீதிபதிகளிடம் வழங்கியதோடு, அதானி குழுமத்துக்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணைக்கு நீதிபதி ஒருவரின் தலைமையிலான குழு அமைக்கலாம். யார் அந்த நீதிபதி என்பதை நீதிமன்றம் முடிவு செய்யலாம் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.