பெர்த்: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நான்கு நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு முதல்முறையாக வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் தொழிலாளர் கட்சி ஆஸ்திரேலியாவில் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டு தனது பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். இதனை ட்விட்டர் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் அமைந்துள்ளதாக தகவல். பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பொருளாதாரம், விளையாட்டு மற்றும் கல்வி உறவுகள் சார்ந்து இந்த பயணம் அமைந்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்தோணி அல்பானீஸ் ட்வீட் செய்திருந்தார்.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதை ட்வீட் மூலம் பகிர்ந்துள்ளார் அந்தோணி அல்பானீஸ். அவர் பெர்த் நகரில் இருந்து புறப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாலை 4 மணி அளவில் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திற்கு அவர் வர உள்ளார்.
இன்று மாலை சபர்மதியில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்திற்கு அவர் செல்கிறார். தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ஹோலி கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்கிறார். நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடி உடன் இணைந்து பார்க்க உள்ளார். இந்தப் போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை மாலை அவர் மும்பை செல்கிறார்.
மார்ச் 10-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார். பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார். பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவர் சந்திக்கிறார். இரு நாட்டு வணிக உறவு சார்ந்தும் இந்தப் பயணத்தின் போது பேசப்படும் என தெரிகிறது. வரும் 11-ம் தேதி தனது இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நாடு திரும்புகிறார்.
This trip demonstrates our commitment to deepening our links with India, and to being a force for stability and growth in our region.