வீட்டினுள் சுவர் ஏறி குதித்து பீரோவை உடைத்து திருடுவது எல்லாம் பழைய பாணி. இருக்கின்ற இடத்தில், ஒரு ஸ்மார்ட் போன் மட்டும் வைத்துக் கொண்டு நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் சுருட்டிவிடுவது தான் நவீன திருடர்களின் பாணி. தொழில்நுட்பம் வளர வளர அதைப் பயன்படுத்தி திருட்டுத் தொழிலையும் நவீனப் படுத்தி வருகிறார்கள்.
பணப் பரிமாற்றத்தை எளிமையாக்க கொண்டு வரப்பட்டது தான் யுபிஐ பண பரிவர்த்தனை முறை. இதன் மூலம் மக்கள் எளிதாக பணம் அனுப்ப முடிகிறது, பணம் பெற முடிகிறது. டீக் கடை முதல் நகைக்கடை வரை, திரையரங்குகள் முதல் கோவில்கள் வரை எங்கு பார்த்தாலும் யுபிஐ கியு ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பணத்தை எளிதாக அனுப்புகிறார்கள்.
இந்த யுபிஐ பரிவர்த்தனை மூலம் தற்போது அட்வான்ஸ் முறையில் மக்களின் வங்கி கணக்கை திருடர்கள் ஹேக் செய்வதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தற்போது புதிய மோசடி தொடங்கியுள்ளது யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது GooglePay-க்கு பணத்தை அனுப்புகிறார். மேலும் உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பியதாக உங்களுக்குத் தெரிவிக்க உங்களை அழைக்கிறார். மேலும் பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும்.
எனவே, உங்கள் கணக்கில் யாராவது தவறாகப் பணம் பெற்றிருந்தால், அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இந்த மோசடி இப்போதுதான் தொடங்கியுள்ளது. என்பதை கவனத்தில் கொள்ளவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சில தொண்டு நிறுவனங்களின் பெயரில் நிதி கேட்பவர்களுக்கு ஜி பே மூலம் பணம் கொடுப்பதற்கு முன்னர் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். ஏனெனில் ஆட்டோ பே முறையில் ஒவ்வொரு மாதமும் அந்த தொகையை வங்கிக் கணக்கிலிருந்து இழந்தவர்கள் இருக்கிறார்கள்.
எனவே தமிழ்நாடு காவல் துறை அளிக்கும் எச்சரிக்கை அறிவிப்புகளை சரியாக உள்வாங்கி அதன்படி நடந்தாலே மிகப் பெரிய இழப்பை தவிர்க்க முடியும்.