புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லியில் சுகாதாரம், கல்வித் துறைகள் கடந்த 65 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன. ஆனால் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்கள் கடின உழைப்பால் அனைத்தையும் மாற்றி ஏழைகளுக்கு தரமான கல்வி, மருத்துவம் வழங்குவதை உறுதி செய்தனர். ஆனால் பிரதமர் மோடி, நாட்டிற்கு நல்ல பணி செய்த சிசோடியா, ஜெயின் ஆகியோரை சிறையில் அடைத்துள்ளார். அதே நேரத்தில் நாட்டை கொள்ளையடிப்பவர்கள் அரவணைக்கப்படுகிறார்கள். சிசோடியா, ஜெயின் சிறையில் இருப்பது பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்யத் தயாராக இருக்கும் துணிச்சலானவர்கள்.
ஆனால் நாட்டின் தற்போதைய வருந்தத்தக்க நிலைமை என்னை கவலையடையச் செய்கிறது. எனவே நாட்டின் முன்னேற்றத்திற்காக ஹோலி தினத்தில் தியானம் செய்து பிரார்த்தனை செய்வேன். நீங்களும் நாட்டிற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சிசோடியாவிடம் 5 மணி நேரம் விசாரணை: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிசோடியாவிடம் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் ஜதராபாத்தை சேர்ந்த மேலும் ஒரு தொழிலதிபர் அருண் பிள்ளை என்பவரை அமலாக்கத்துறை திங்களன்று மாலையில் கைது செய்தது.