புதுடெல்லி: கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ரயில்வேயில் வேலைபெறுவதற்காக பலர் அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலுவிடம் நிலங்களை கொடுத்ததாகவும் அல்லது குறைந்த விலைக்கு விற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக பிஹார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் பாட்னாவில் நேற்று முன்தினம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக லாலு பிரசாத்திடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட லாலு பிரசாத் யாதவ், டெல்லி பாந்தரா பார்க்கில் உள்ள மகள் மிசா பாரதி வீட்டில் தங்கியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் 5 பேர் நேற்று காலை வந்தனர். “லாலுவின் உடல் நிலை சரியில்லை. பேசமுடியாத நிலையில் உள்ளார். இருந்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என லாலு குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
லாலுவிடம் நடத்திய விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘லாலு, ரப்ரி தேவி குடும்பத்தினர் பல ஆண்டுகளாக தொந்தரவு செய்யப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் அடிபணியவில்லை’’ என்றார்.
கபில் சிபல் எம்.பி. கூறுகையில், ‘‘லாலு உடல் நலம் குன்றியிருப்பது அனைவருக்கும் தெரியும். தேஜஸ்விக்கு அழுத்தம்கொடுக்க, மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது’’ என்றார்.