தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள கொன்றால் பாவம் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஏற்கனவே கன்னட மொழியில் வெளிவந்து அந்த மாநிலத்தின் தேசிய விருதையும் வென்றுள்ளது. மேலும் தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் வெளியாகியுள்ளது. அனைத்து மொழிகளிலும் தயாள் பத்மநாபனே இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் டைகர் தங்கதுரை, மனோபாலா, எஸ்ஆர் சீனிவாசன், சுப்ரமணியம் சிவா, மீசை ராஜேந்திரன், ஆகியோர் நடித்துள்ளனர். வரும் மார்ச் 10ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு இந்த படத்தின் சிறப்பு காட்சி போடப்பட்டது.
1985 காலகட்டங்களில் தர்மபுரியில் நடக்கும் கதையாக திரைக்கதை அமைந்துள்ளது. சார்லி மற்றும் ஈஸ்வரி ராவின் மகளாக வரலட்சுமி உள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக வரலட்சுமிக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் உள்ளது, மேலும் கடன் பிரச்சனை காரணமாக குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. இந்த சமயத்தில் சந்தோஷ் பிரதாப் வழிப்போக்கனாக ஒரு நாள் இவர்கள் வீட்டில் தங்குகிறார், அப்போது அவரிடம் நிறைய நகை, பணம் இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது. வரலட்சுமி அவரை கொன்று அவரிடம் இருந்து பணம், நகையை பெற்றுக்கொண்டு வாழ நினைக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கொன்றால் பாவம் படத்தில் கதை.
கொன்றால் பாவம் படத்தை ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தான் எடுத்து செல்கின்றனர். நடிகர்களின் பெர்பார்ம்மன்ஸ் கதைக்கு கூடுதல் பலம் கொடுக்கிறது. பெரிதாக பாடல் காட்சிகள் இல்லாத, கிளைக் கதைகள் இல்லாத இந்த கதையில் அந்தந்த கதாபாத்திரங்களை உயிர் கொடுக்கின்றன. முழு படமும் ஒரு வீட்டை சுற்றியே நடைபெறுமாறு உள்ள நிலையில் ஒவ்வொரு வரும் போட்டி போட்டுக் கொண்டு எதார்த்தமாகவும் நடித்துள்ளனர். குடிகார தந்தையாக சார்லி வழக்கம் போல நடிப்பில் அசத்தியுள்ளார். காலா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்த பிறகு ஈஸ்வரி ராவிற்கு இது ஒரு நல்ல கதாபாத்திரம், அதை உணர்ந்து தனது முழு நடிப்பு திறனையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு பக்கம் வில்லியாக அசத்தி கொண்டிருக்கும் வரலட்சுமி இந்த படத்தில் ஒரு இளம் பெண்ணாக அசத்தியுள்ளார். அச்சு அசலாக ஒரு கிராமத்து பெண்ணாக கண்முன் நிற்கிறார். மறுபுறம் சந்தோஷ் பிரதாப் ஒரு மிடுக்கான இளைஞனாக மின்னுகிறார். பல இடங்களில் தனது நடிப்பின் மூலம் கைத்தட்டல்களையும் பெறுகிறார். இவர்களை தவிர டைகர் தங்கதுரை, மனோபாலா, சென்றாயன் என ஒரு காட்சியில் வந்தாலும் மனதில் பதிகின்றனர். படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் அடுத்தடுத்து என்ன ஆகப் போகிறது என்று பரபரப்பு நமக்குள் எழுகிறது. ஆசை மற்றும் பேராசை அதிகமானால் மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை இப்படத்தின் மூலம் உணர்த்துகிறார் இயக்குனர் தயால் பத்மநாபன். ஒரு மனிதனுக்கு பேராசை வந்து விட்டால் அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை அழகான திரைக்கதையின் மூலம் எடுத்து சொல்லி இருக்கிறார். படம் முழுக்க வசனங்களும் நன்றாக இருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு. சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் சிறப்பாக இருந்தது. கொன்றால் பாவம் தின்னா போச்சு.