கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு கோஷம்

திருநெல்வேலி: கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக திருநெல்வேயில் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் கூச்சல், குழப்பம் நீடித்ததால் கூட்டம் பாதியில் நிறைவடைந்தது. ஆதீன கர்த்தர்கள் மற்றும் போலீஸாரின் சமாதான முயற்சி தோல்வியில் முடிந்தது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை வரையறை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் உறுப்பினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கயிலாய மரபுவழி பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை குமரகுருபர சுவாமிகள், மு.பெ.சத்தியவேல் முருகனார், ப.குமரலிங்கனார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவமும் கலந்து கொண்டார்

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டல அளவிலான இந்த கருத்துகேட்பு கூட்டத்தை சுகி சிவம் தொடங்கி வைத்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார்.

தமிழில் குடமுழுக்கு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மாவட்டத் தலைவர் தயாசங்கர் தலைமையிலான பாஜகவினரும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்தனர். வேறு சிலர் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்ததால் கூச்சல், குழப்பம் நீடித்தது.

இதையடுத்து ஆட்சேபம் எழுப்பிய குழுவில் இருந்து ஒருவரை பேச அழைத்தனர். அவர் பேசிக் கொண்டிருந்த போது மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீஸார் அரங்கினுள் குவிக்கப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும் கூட்டத்தை குழப்பும் வகையில் செயல்படுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர்.

‘கருத்துப் படிவங்களை நிரப்பி நேரில் அளிக்கலாம், தபாலிலும் அனுப்பலாம்’ என்று பொன்னம்பலம் அடிகளார் தெரிவித்தார். அப்போது சிலர் அந்தப் படிவங்களை கிழித்து எறிந்தனர். இருக்கைகளில் அமராமல் இரு தரப்பினரும் கத்தி முழக்கமிட்டதால் தொடர்ந்து கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கருத்து கேட்பு படிவங்களை மட்டும் குழுவினர் பெற்றுக்கொண்டனர். இரு தரப்பினரையும் போலீஸார் வெளியேற்றினர். கூட்டம் பாதியில் முடிவடைந்தது.

சுகி சிவத்துக்கு கடும் எதிர்ப்பு: கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு சுகி சிவத்தை பார்த்து சிலர் ஆவேசத்துடன் பேசினர். சுகி சிவம் அவர்களை நோக்கி பதிலுக்கு ஆவேசமாக பதில் அளித்தார். இதுகுறித்து பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் டி.வி.சுரேஷ் கூறும்போது, “ஆளுங்கட்சியினரிடம் நல்ல பெயர் கிடைக்கவும், திமுகவின் அனுதாபத்தைப் பெறவும், அதன்மூலம் தமிழக அரசில் பெரிய பதவிகள் பெறவேண்டும் என்பதற்காகவும், இந்து விரோத கருத்துகளை சுகி சிவம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஆன்மிகம் என்ற பெயரில் இந்துமத நம்பிக்கைகள் குறித்து புண்படும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார். இந்தக் கூட்டத்திலேயே ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மோதல் வலுக்கும் வகையில் பேசினார். அதனால்தான் குறிப்பாக அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.