கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்தாண்டு தீபாவளிக்கு முந்தைய தினம் கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மிகப்பெரிய அளவிலான வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமேசா முபின் மற்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக அப்போதே தகவல் வெளியானது.
ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக இத்தனை நாள்கள் அவர்கள் பொறுப்பு ஏற்கவில்லை. இந்நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம், கர்நாடக மாநிலம் மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவத்துக்கு நாங்கள் தான் காரணம் என ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள தங்களது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் மூலம் இரண்டு சம்பவங்கள் நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக 200 பேரை சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்து கண்காணித்து வருகிறோம். தற்போது ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதால் அவர்களின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
மேலும் கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ் அமைப்பு உண்மையிலுமே பொறுப்பேற்றுள்ளதா அல்லது அவர்கள் பெயரில் வேறு யாராவது தகவல் வெளியிட்டுள்ளார்களா என்றும் விசாரித்து வருகிறோம்.” என்றனர்.