விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஸ்ரீசுப்பிரமணியசாமி திருக்கோயிலில் மாசிமகம் பிரம்மோத்ஸ்வத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 25 – ம் தேதி தொடங்கிய விழா தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற்றது. இந்தத் திருவிழா நாள்களில் தினசரி சுவாமி திருவீதி உலா கண்டருளினார். தினத்தோறும் காலை, மாலை யாகசாலை, அஸ்திரதேவர் புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மாசி மகம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிவப்பு மற்றும் பச்சை, வெள்ளை சாத்து நிகழ்வுகளில் உற்சவர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன்படி, விழாவின் முதல்நாளில் முத்துச்சப்பரம், இரண்டாம் நாள் ஆட்டுக்கிடா வாகனம், மூன்றாம் நாள் சுப்பிரமணியசாமி சப்பரம், நான்காம் நாள் கஜ வாகனம், ஐந்தாம் நாள் காமதேனு வாகனம், ஆறாம் நாள் குதிரை வாகனம் என வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளினார் சுப்பிரமண்யர். விழாவின் ஏழாம் நாளில் சண்முக பெருமாள் கோலத்தில் வெட்டிவேர் சப்பரத்திலும், இதற்கடுத்த நாள்களில் ஸ்ரீசண்முகர் வடிவில் சிவப்பு சாத்து ருத்ரரூபமாகக் வீதி உலாவந்தருளினார். எட்டாம் நாள் வெண்பட்டு சாத்தி பிரம்ம ரூபமாகக் காட்சி கொடுத்தார். பத்தாம் நாள் சாமி திருத்தேரோட்டமும் நடைபெற்றது.
விழாவின் கடைசி நாளான இன்று மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியாக தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர், நாதஸ்வரம் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கையுடன் திருவீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.