தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகச் சிலர் வதந்திகளைப் பரப்பியது, தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்த தமிழ்நாடு அரசு, பொய்யான தகவல்களை மோதலை ஏற்படுத்தும் நோக்கில் பரப்பியவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சேலத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தி.மு.க பிரமுகர் ஒருவர் தான் வேலை பார்த்ததற்கு சம்பளம் கொடுக்காமல் கொலைமிரட்டல் விடுப்பதாக புகார் அளித்திருக்கிறார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவர் சேலம், அரியா கவுண்டம்பட்டியில் வசித்து வருகிறார். இவர் அளித்திருக்கும் புகாரில், “ஓமலூரைச் சேர்ந்த இளங்கோ என்பவர் மூலமாக கே.என் புதூரில் வசிக்கும் ராஜி என்பவரின் புதிய வீடு கட்டுமானப் பணியை ஆறு மாதங்களில் முடித்துக் கொடுத்தோம்.
என்னுடன் 15 பேர் தங்கி பணிபுரிந்தனர். கட்டட வேலை தொடங்கி டைல்ஸ் ஒட்டும் பணி வரைக்கும் நாங்கள்தான் செய்தோம். ஆனால், பணி முடிந்தும் அந்த வீட்டுக்காரர் வேலைக்கான 10 லட்சம் ரூபாயைத் தராமல் அலைக்கழித்து வந்தார். மேலும் அவரிடம் பணம் கேட்கும் போதெல்லாம், `என்னிடமே பணம் கேட்பாயா… திருட்டுப் பயலே’ என மிரட்டுகிறார்.
`நான் நெனச்சா இந்த நிமிஷமே உங்க மேல புகார் கொடுத்து உள்ள தள்ளிடுவேன். உங்களை ஊரில் விட்டதே தப்பு.. திருடவந்ததாகக் கூறி அடித்துக் கொன்று புதைக்க வேண்டும்’ என கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதே போன்று சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கட்டட வேலை செய்து வந்த வினோத் குமார் எனும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரும், `நான் வேலை பார்த்த இன்ஜினீயர், ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொடுக்காமல் மிரட்டுகிறார்’ என்று புகார் அளித்திருக்கிறார்.