AIADMK BJP Issue, Jayakumar: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்த அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான CTR நிர்மல் குமார், பி.திலீப் கண்ணன் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், பாஜகவில் இருந்து விலகியவர்களை அதிமுகவில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூட்டணி தர்மத்தை மீறியதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பாஜகவினர் கடந்த இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முக்கிய கூட்டம்
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “கல் வீசினால் உடைய அதிமுக கண்ணாடி இல்லை. அதிமுக என்பது கடல். கடலில் கல் வீசினால் கல்தான் காணாமல் போகும்.
பக்குவம் வேண்டும்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சியுடன் உள்ள காரணத்தால், விருப்பப்பட்டு அதிமுகவில் இணைகின்றனர். இதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் அரசியல் கட்சி தலைவருக்கு இருக்க வேண்டும். அண்ணாமலைக்கும் இருக்க வேண்டும். அதிமுக அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு இருப்பதால், அனைவரும் வந்து இணைகின்றனர். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது.
எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜகவினர் எரிப்பது போன்ற நிகழ்வுகளை அக்கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டுள்ளது. அவர்கள் கிளர்ந்து எழுந்தால் என்ன ஆகும்” என்று தெரிவித்தார்.
‘420 ஆட்சி’
குறிப்பாக நான் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று அண்ணாமலை கூறியது தொடர்பாக பேசிய ஜெயக்குமார், “அண்ணாமலை எப்படி தலைவர் ஆனார் என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், நான் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்லக்கூடாது. ஜெயலலிதா மாதிரி ஒரு தலைவர் இனி பிறக்கப்போவது இல்லை” என்று தெரிவித்தார். zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-leader-annamalai-consoled-to-ops-in-theni-435275
பாஜக, அதிமுக இடையில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் கூட்டணியை பாதிக்குமா என்ற கேள்விக்கு, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட இருவரும் கூறியுள்ளனர் என்றார்.
கடந்த நான்காண்டு அதிமுக ஆட்சி 420 (மோசடி) ஆட்சி என்று பாஜக நிர்வாகி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், “தலைவர்கள் கூறும் கருத்துகளுக்கு மட்டுமே பதில் அளிப்பேன். மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
உச்சத்தில் இருக்கும் உட்கட்சி பூசல்
தமிழ்நாடு பாஜகவின் உட்கட்சி பூசல் தற்போது உச்சமடைந்துள்ளது எனலாம். 2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற பின், அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர்தான், பாஜகவின் உட்கட்சியில் பெரிதும் சலசலப்பு ஏற்பட தொடங்கியது.
பாஜக நிர்வாகி கே.டி. ராகவன் மீதான பாலியல் குற்றச்சாட்டு, திருச்சி சூர்யா – டெய்சி பிரச்னை, அதை தொடர்ந்து திருச்சி சூர்யா கட்சியில் இருந்து விலகியது, காய்திரி ரகுராமின் திடீர் விலகல் என பல பிரச்னைகள் அண்ணாமலையில் தலைமையை கேள்விக்குட்படுத்தின.
‘ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும்’
இதையடுத்து, சமீபத்தில், பாஜகவின் மிகவும் பலம்வாய்ந்த பிரிவாக பார்க்கப்படும், தகவல் மற்றும் தொழில்நுட்பம் பிரிவின் தலைவராக இருந்த CTR நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகிய அன்றே, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் ஐக்கியமானார். தொடர்ந்து, அண்ணாமலையின் மீது பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அண்ணாமலை வேவு பார்ப்பதாக கூறிய அவர், அண்ணாமலை திமுக அமைச்சர் ஒருவருடன் இணைந்து திரைமறைவில் நடித்து வருவதாகவும் குற்றச்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், நேற்று பேசிய அண்ணாமலை,”பா.ஜ.க.வில் இருந்து சேர்த்து தான் பெரிய கட்சி என காட்ட வேண்டுமா?. அந்த நிலைமைக்கு உங்கள் கட்சி வந்து விட்டதா என மக்கள் நினைக்கின்றனர். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும். தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன்.
ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும். தலைவர்கள் முடிவு எடுத்தால் 4 பேர் கோபித்து கொண்டு வெளியே வருவார்கள். நானும் அந்த வரிசையில் தலைவர் தான். பா.ஜ.க.வில் மேனேஜராக இல்லை. கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவும் எடுப்பேன். வரும் காலத்தில் வேகம் அதிகமாக தான் இருக்கும். குறைய போவதில்லை” என்றார்.