பிரபல அரசியல் விமர்சகரும், நாதக, அதிமுகவின் ஆதரவாளருமான சவுக்கு சங்கர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் இடத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், நேற்று இரவு 10.47 மணிக்கு, பிரவின் என்ற ட்விட்டர் பக்கத்தில், நான் தமிழக பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை பெயரில் கடிதம் ஒன்று பதியப்பட்டு உள்ளது.
அந்த கடிதம் போலியானது. பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் கையெழுத்தும் போலியாக பயன்படுத்தப்பட்டு இருப்பது கிரிமினல் குற்றமாகும்.
இந்த போலி ட்வீட்டை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பரப்பி வருவது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கண்ட ட்விட்டர் பதிவாளர்கள் மீது தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்து தொடரலாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
செய்தியின் சுருக்கம் : மாநில பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரில் போலி கடிதம் உருவாக்கி, அதனை திமுகவினர் பரப்ப, அதனை அப்படியே தமிழகத்தின் பிரபலமான ஒரு செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் இடத்தில் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார்.