புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திஹார் சிறையில் தியான வசதி கொண்ட விப்பாசனா அறையில் அடைக்கப்படாமல், பிற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “தனக்கு தியான வசதி கொண்ட அறை சிறையில் வழங்கப்பட வேண்டும் என்று மணீஷ் சிசோடியா வேண்டுகோள் விடுத்திருந்தார். நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டிருந்தது. நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தும், அவர் குற்றவாளிகளுடன் சிறையில் அறை எண் 1-ல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் டெல்லியின் முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா திஹார் சிறையில் மூத்த குடிமகன்களுக்கான அறையில் அடைக்கப்படுள்ளார். அவர் திஹார் சிறையில் அறை எண் 1- ல் அடைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, 8 மணி நேர விசாரணைக்கு பிறகு இவரை சிபிஐ கைது செய்தது. நீதிமன்ற அனுமதியுடன், சிபிஐ காவலில் இவரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. சிபிஐ காவல் முடிவடைந்ததால் சிசோடியா திங்கள்கிழமை பிற்பகலில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை மார்ச் 20 வரை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், 2 ஜோடி மூக்கு கண்ணாடி, ஒரு டைரி, பேனா, பகவத் கீதை புத்தகம் ஆகியவற்றை சிசோடியாவுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியான வசதி கொண்ட அறையில் அடைக்க வேண்டும் என்ற சிசோடியாவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.