நாகலாந்து, மேகாலயாவில் பா.ஜ கூட்டணி அரசுகள் பதவி ஏற்பு: கன்ராட் சங்மா, நெய்பியூ ரியோ மீண்டும் முதல்வரானார்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

ஷில்லாங்: நாகலாந்து, மேகாலயாவில் பா.ஜ கூட்டணி அரசு நேற்று பதவி ஏற்றது. மேகாலயாவில் கன்ராட் சங்மாவும், நாகலாந்தில் மீண்டும் நெய்பியூ ரியோவும் முதல்வராக பதவி ஏற்றனர். மேகாலயா,  நாகலாந்து, திரிபுராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்,  மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 26 தொகுதிகளை ஆளும் தேசிய மக்கள்  கட்சி கைப்பற்றியது. பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், பாஜ உள்ளிட்ட  பிற கட்சிகள் முதல்வர் கான்ராட்  சங்மாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால்,  பாஜவின் இரண்டு எம்எம்ஏக்கள்  உள்பட 45 எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு  கிடைத்துள்ளது. அதையடுத்து கான்ராட் சங்மா நேற்று இரண்டாவது முறையாக  முதல்வராக பதவியேற்றார். அவருடன் சேர்த்து 12 பேர் அமைச்சர்களாக பதவி  ஏற்றனர்.

இதில் என்பிபி கட்சியின் பிரஸ்டோன் டைன்சாங், ஸ்னியாவ் பலாங்தார் ஆகியோர் துணை முதல்வராக பதவி ஏற்றனர். இவர்கள் தவிர என்பிபி கட்சியில் இருந்து மார்குயிஸ் என் மரக், ரக்கம் ஏ சங்மா, அம்பரீன் லிங்டோ, கமிங்கோன் யம்போன், ஏ டி மோண்டல் ஆகியோர்  அமைச்சர்களாக பதவியேற்றனர்.  பா.ஜவை சேர்ந்த அலெக்சாண்டர் லாலு கெக், ஐக்கிய ஜனநாயக கட்சியை சேர்ந்த பால் லிங்டோ, கிர்மென் ஷெல்லா, மலைவாழ் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஷக்லியார் வாஜ்ரி ஆகியோரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். தேசிய மக்கள் கட்சிக்கு 8, கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனநாயகக்  கட்சிக்கு 2, பாஜ  மற்றும் மலைவாழ் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு  தலா ஒன்று என அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட்டன. கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் பாகு சவுகான் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் பங்கேற்றனர்.

அதேபோல் நாகலாந்தில்,  தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – பாஜ  கூட்டணி  மொத்தமுள்ள 60  சட்டப்பேரவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி  மீண்டும் ஆட்சியை  கைப்பற்றியது. இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நெய்பியூ ரியோ தலைமைக்கு ஆதரவு அளித்தன. இதையடுத்து 60 உறுப்பினர்கள் ஆதரவுடன் நெய்பியூ ரியோ 5வது முறையாக நாகலாந்து முதல்வராக நேற்று மீண்டும்  பதவியேற்றார். ஆளுநர்  இல.கணேசன், முதல்வர் நெய்பியூ ரியோவுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும்  செய்து வைத்தார். மேலும் என்டிபிபி கட்சி சார்பில் டிஆர் ஜெலியாங், பா.ஜ சார்பில் யாந்துங்கோ பாட்டன் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி  ஏற்றனர். மேலும் என்டிபிபி கட்சி சார்பில் கொய்டோ அய், கே.ஜி கென்யே, மெட்சுபோ ஜமீர், சிஎல் ஜான், பா.ஜ சார்பில் மாநில தலைவர் தெம்ஜென் இம்னா அலாங், ஜேக்கப் ஜிமாமி, பாய்வாங் கோன்யாக், பசங்மாங்பா சாங் ஆகியோர் பதவி ஏற்றனர்.

என்டிபிபி கட்சி சார்பில் 7 பேரும், பா.ஜ சார்பில் 5 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த விழாவில் பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ  தலைவர் ஜே.பி.நட்டா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர். நாகலாந்து முதல்வராக நெய்பியூ ரியோ 2003ம் ஆண்டு பதவி ஏற்றார். அதை தொடர்ந்து 2008, 2013, 2018, 2023ம் ஆண்டு தேர்தல்களில் வென்று 5வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். இதற்கு முன்பு எஸ்சி ஜமீர் 1980, 1982-86, 1989-90, 1993-2003 வரை முதல்வராக பதவி வகித்தார். அந்த சாதனையை நெய்பியூ ரியோ முறியடித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.