புதுடெல்லி: நாடு விரைவான முன்னேற்றத்தை காண தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
“வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நிதிச் சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான இணையவழிக் கருத்தரங்கில் நேற்று கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்களை வலுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது. ஏனெனில், உலக நாடுகள் இந்தியாவை சந்தேக கண் கொண்டு பார்த்த நிலை இன்று முற்றிலும் மாறியுள்ளது. இன்று உலகுக்கே முன்னுதாரண நாடாக இந்தியா மாறியுள்ளது. உலக பொருளாதார வளர்ச்சிக்கான நம்பிக்கை மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
துணிச்சல், தெளிவு மற்றும் நம்பிக்கையுடன் கொள்கை முடிவுகளை மேற்கொண்டு அதனை அமல்படுத்துவதில் அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
அதன் காரணமாக, சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
வரிச் சுமை குறைக்கப்பட்ட போதிலும் உயர்ந்து வரும் வரி வசூல் இந்தியாவின் வேகமான வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
கடந்த 2013-14-ம் ஆண்டில் ஒட்டுமொத்த வரி வருவாய் ரூ.11 லட்சம் கோடியாக மட்டுமே இருந்த நிலையில், 2023-24-ல் இந்த வசூல் 200 சதவீதம் உயர்ந்து ரூ.33 லட்சம் கோடியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
வரி செலுத்துவது என்பது தேசக் கட்டமைப்புடன் நேரடித் தொடர்புடைய கடமையாகும். மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்கு சான்றாக அவர்கள் செலுத்தும் வரியும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
நாடு அதிகபட்ச பலனை அடைவதற்கு அரசைப் போலவே தனியார் துறையும் தங்களது முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திறமை, உள்கட்டமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக இந்தியாவின் நிதி அமைப்பு முறையை நாம் உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
புதிய திறன்களுடன் இந்தியா முன்னேறி வரும் வேளையில், நிதித் துறையில் ஈடுபட்டுள்ளோரின் பொறுப்பும் அதிகரித்துள்ளது. இந்தியா வடிவமைத்த யுபிஐ, ரூபே போன்ற தொழில்நுட்பங்கள் இன்று உலக நாடுகளுக்கு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், நிதி நிறுவனங்கள் நமது நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து தங்களது சேவையை விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சில தருணங்களில் சிறிய முயற்சி கூட மிகப்பெரிய மாற்றத்துக்கு வித்திடும்.
பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் ஒவ்வொரு பிரிவினரையும், ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.