குடிநீர் பிரச்சினையை சமாளிக்க நெல்லை மாவட்டத்திற்கு ரூ.605 கோடி சிறப்பு நிதி ஒதுக்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் மாவட்டத்தில் உள்ள ஊராட்ச்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் பேசினர் .
ஸ்மார்ட் வகுப்புகள்
இதனைத் தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் சபாநாயகர் அப்பாவு ஏற்பாட்டின் பேரில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நெல்லை மாவட்டத்தில் 208 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். இதற்கான பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.
குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை!
நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்துகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்ட கவுன்சிலர்களும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஒரு கிராம பஞ்சாயத்தை தேர்ந்தெடுத்து அதற்கு தேவையான நிதியை நீங்கள் வழங்க . எம்எல்ஏ, எம்பி நிதிகள் மற்றும் பல்வேறு நிதிகள் ஒதுக்கப்பட்டு அந்த பஞ்சாயத்து முன்மாதிரி பஞ்சாயத்தாக தேர்வு செய்யப்பட்டு அதற்கு தலா ரூ.10 லட்சம் ஒதுக்கப்படும். 4 ஆண்டுகளில் அந்த பஞ்சாயத்து தன்னிறைவு பெற்ற பஞ்சாயத்தாக மாறிவிடும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.
நெல்லை மாவட்டத்திற்கு ரூ.605 கோடி சிறப்பு நிதி
தமிழ்நாடு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனையை சமாளிக்கவும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கவும் அந்த வீடுகளுக்கு தேவையான அளவு குடிதண்ணீர் கிடைக்க குடிநீர் ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசிடமிருந்து நெல்லை மாவட்டத்திற்கு ரூ.605 கோடி சிறப்பு நிதி பெற்றுத்தந்த சபாநாயகர் அப்பாவுக்கும், நிதி ஒதுக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர்,லிங்கசாந்தி, ஜான்ஸ் ரூபா, தனிதங்கம், கிருஷ்ணவேணி, சாலமோன் டேவிட், அருண் தவசு, சத்தியவாணி முத்து, கனகராஜ், மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.