லண்டன், பிரிட்டன் சென்றுள்ள காங்., – எம்.பி., ராகுல், அங்கு துணைவேந்தராக உள்ள பாக்.,கைச் சேர்ந்த கமால் முனீருடன் ஒரே மேடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்., – எம்.பி., ராகுல், தலைநகர் லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலையில், ’21ம் நுாற்றாண்டில் கேட்டலுக்கான கற்றல்’ என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் சமீபத்தில் உரையாற்றினார்.
பின்னர் நடந்த கருத்தரங்கிலும் பேசினார். இந்த பல்கலை துணைவேந்தராக உள்ள கமால் முனீரும், ராகுல் பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டார்.
நம் அண்டை நாடான பாக்.,கைச் சேர்ந்த இவர், பாக்., ரிசர்வ் வங்கி, உலக வங்கி, ஆசிய வங்கி ஆகியவற்றில் பணியாற்றியதுடன், பாக்., தொழில்துறை வகுத்த கொள்கை குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.
பாக்., அரசு துறைகளிலும் கமால் முனீர் பணியாற்றியுள்ளார். தற்போது, கேம்ப்ரிட்ஜ் பல்கலையில், சார்பு துணைவேந்தராக பணியாற்றும் கமால் முனீர், அங்கு உத்திகள் மற்றும் கொள்கை துறை பேராசிரியராக உள்ளார்.
இங்கு நடந்த விழாவில் ராகுல் பேசும் போது, கமால் முனீர் அருகில் ஒரே மேடையில் நின்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பாகிஸ்தான் அரசில் இடம் பெற்றிருந்த நபர் இருந்த மேடையில், ராகுல் பேசியது நம் நாட்டில் பல தரப்பிலும் கண்டன குரல்களை எழுப்பியுள்ளது.
ராகுல் பேசும்போது, ”இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்புகள் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. இதற்கு எதிராக குரல் கொடுக்கவே இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
”ஊடகங்கள், நிறுவன கட்டமைப்புகள், நீதித்துறை, பார்லிமென்ட் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், மக்களின் குரல் ஒடுக்கப்படுகிறது,” என்றார்.
இது தொடர்பாக, பா.ஜ., செய்தித்தொடர்பாளர் ஷெஜாத் பூனவாலா கூறும்போது, ”ராகுல், அன்னிய மண்ணில் நமது இறையாண்மையை தாக்கி உள்ளார்.
”தற்போது, இந்தியாவையும், இந்திய அமைப்புகளையும் குறைத்து மதிப்பிட்ட ராகுல், பாக்.,கைச் சேர்ந்தவருடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்