வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொழிலதிபர்கள் குழுவுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழுவினர், ரூ100 கோடி வரை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும், அதனை ஆம் ஆத்மியினர் பெற்று கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது இந்த குழுவில், முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், எம்எல்சி.,யுமான கவிதா இருப்பதும் தெரியவந்ததை தொடர்ந்து, விசாரணை அமைப்புகளின் பார்வை அவர்கள் மீது திரும்பியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கவிதா தொடர்புடைய வீடுகளில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அவரின் மாஜி ஆடிட்டர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாளை (மார்ச் 09) நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement