மும்பை மலாடு குரார் பகுதியில் வசிப்பவர் ஜோதிராம். இவரின் மனைவி பாயல். பாயலுக்கு இது இரண்டாவது திருமணமாகும். முதல் மனைவிக்கு ஒரு மகன் இருக்கிறார். மகனும், முதல் கணவனும் தனியாக வசித்து வருகின்றனர். ஆனாலும் முதல் கணவனுடன் பாயல் தொடர்பில் இருந்து வந்தார்.
கடந்த மே மாதம் 7-ம் தேதி ஜோதிராம் தன் மனைவியுடன் சாங்கிலியில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை பார்க்க சென்றார். அவர்கள் மே 13-ம் தேதி திரும்ப வந்தனர். வீட்டிற்குள் வந்து பார்த்த போது உள் கதவின் பூட்டு காணாமல் போயிருந்தது. அதோடு வீடு முழுக்க பொருள்கள் சிதறிக்கிடந்தது.
வீட்டின் பீரோவில் இருந்த 4 லட்சம் பணம், நகைகள் காணாமல் போயிருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.8.3 லட்சமாகும். பக்கத்து வீட்டில் விசாரித்துப்பார்த்துவிட்டு, இது குறித்து ஜோதிராம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். உதவி இன்ஸ்பெக்டர் பங்கஜ் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.
ஜோதிராம் வசித்த கட்டடத்திலோ அல்லது அருகிலோ கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் யார் வந்து சென்றது என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கைரேகை நிபுணர்களின் உதவியோடு திருடப்பட்ட பீரோ, தங்க நகைகள் இருந்த பெட்டகத்தில் பதிவாகியிருந்த கைரேயை பதிவுசெய்தனர்.
போலீஸாருக்கு கைரேகை மட்டுமே ஆதாரமாக கிடைத்தது. எனவே இவ்வழக்கை முன்னெடுத்துச்செல்வதில் தாமதம் ஏற்பட்டது. ஜோதிராம் மனைவி பாயல் கைரேகையுடன் வீட்டில் கிடைத்த கைரேகையை ஒப்பிட்டு பார்த்ததில் கைரேகை ஒத்துப்போனது. ஆனால் இத்திருட்டில் தனக்கு தொடர்பு இல்லை என்று பாயல் மறுத்து வந்தார். தீவிர விசாரணைக்கு பிறகு திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு போலீஸார் அவரை கைதுசெய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி பங்கஜ், “ஜோதிராம் சாங்கிலி புறப்படும் முன்பு காரை கழுவி தயாராக வைப்பதாக கூறிவிட்டு, புறப்பட்டு சென்றார். தான் ஒரு மணி நேரத்தில் வருவதாக பாயல் தெரிவித்திருந்தார். அந்த இடைப்பட்ட நேரத்தில் பாயல் தன் முன்னால் கணவருக்கு போன் செய்து வரவழைத்து வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்து கொடுத்து அனுப்பி வைத்தார்.பின்னர் வீட்டில் இருந்த பொருள்களை எடுத்து ஆங்காங்கே போட்டு திருட்டு போனது போன்று காட்டிவிட்டு பாயல் தன் கணவருடன் சாங்கிலி புறப்பட்டுச் சென்றார்” என்று தெரிவித்தார்.