முறை தவறிய உறவால் வந்த வினை; கணவருக்கு சைலன்சரால் சூடு வைத்து தலையில் சிறுநீர் கழித்து சித்ரவதை: மனைவி, ஆட்டோ டிரைவர் கைது

திருமலை: கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், அவர்கள் இறந்துவிட்டதாக முகநூலில் பதிவு செய்தார். ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், ஆட்டோ டிரைவருக்கு சூடு வைத்து, தலையை மொட்டை அடித்து சிறுநீர் கழித்து கொடுமை செய்துள்ளார். இதையடுத்து ஆட்டோ டிரைவரின் மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஏ.ரங்கம்பேட்டையை சேர்ந்தவர் வம்சி (30). ஆட்டோ டிரைவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமான தெலங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த 25 வயதுள்ள இளம்பெண்ணை காதலித்துள்ளார்.

நீண்ட நாட்களாக காதலித்த இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்துள்ளனர். வம்சி, திருப்பதி முஸ்லிம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் அன்வர் என்பவரின் ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகிறார். வாடகையை வசூலிக்க வம்சி வீட்டிற்கு அன்வர் வந்து செல்வாராம். அப்போது வம்சியின் காதல் மனைவியுடன் அன்வருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நெருக்கத்தை உருவாக்கியுள்ளது. வம்சி வீட்டில் இல்லாதபோது இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர், வம்சியிடம் தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த வம்சி, மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் வம்சியின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு செல்லாமல் கள்ளக்காதலன் அன்வருடன் சென்றுள்ளார். இதனால் மன வேதனையடைந்த வம்சி, ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு பெங்களூரில் வேலைக்கு சென்றுவிட்டார். இதற்கிடையில் முகநூலில், தன் மனைவியும் அன்வரும் இணைந்து இருக்கும் போட்டோவை பார்த்த வம்சி கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து அவர்கள் இறந்து விட்டதாக இரங்கல் தகவலை ஆங்கிலத்தில் பதிவு செய்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அன்வர், சந்திரகிரியை சேர்ந்த தனது நண்பர் ஹர்ஷா மற்றும் சிலருடன் பெங்களூர் சென்றார். வம்சியை காரில் சந்திரகிரிக்கு கடத்தி வந்தனர். மேலும் சில நண்பர்களுடன் வம்சியை சைலன்சரால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் தலையில் சிறுநீர் கழித்து மொட்டை அடித்தனர். இதனை வீடியோ எடுத்தனர். இதையடுத்து ‘நான் செய்தது தவறு.

அதனால் நானே மொட்டை அடித்து கொண்டேன்’ என பேசும்படி வம்சியை மிரட்டி அந்த வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதை பார்த்த வம்சியின் நண்பர்கள், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சந்திரகிரி போலீசில் வம்சி புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அன்வர், வம்சியின் மனைவி ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். முறைதவறிய உறவால் இச்சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.