சேலம்: ‘வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அச்சுறுத்தி வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழக முதல்வர் வடமாநில தொழிலாளர்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பு வழங்கி வருகிறார்’ என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் விக்கிரமராஜா ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ஆலோசனை கூட்டத்தில், வரும் மே 5ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெறும் வணிகர் சங்க மாநில மாநாட்டுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் விடுமுறை அளித்து, மாநாட்டு நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்.
உணவுபாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் மூலம் உரிமம் பெறுதல், புதுப்பித்தலுக்கு பலவித சட்டத்திட்டங்கள் கடுமையாக உள்ளது. இதனை பரிசீலனை செய்து எளிமைப்படுத்த வேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து வணிகர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெயசீலன், சேலம் மாவட்ட பேரமைப்பு செயலாளர்கள் இளையபெருமாள், வர்கீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியது: சிலிண்டர் விலை உயர்வை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விலை ஏற்றமானது மக்களின் மீதே சுமத்தப்படும். உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு துறைகளை சேர்ந்த தவறான அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறும் பிரச்சினை இருந்து கொண்டே உள்ளது. எனவே, சட்டவிதிகளை மத்தியஅரசு எளிமைப்படுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பிலும் இடர்பாடுகள் உள்ளது. அதையும் எளிமைப்படுத்திட வேண்டும். குறிப்பாக சில சட்டங்களை ஆய்வு செய்வதற்கு மாநில அரசுக்கு கட்டாயம் வழிவகை செய்ய வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகள் சாமான்ய வணிகர்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறியும் ஆபத்து நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அதிலிருந்து காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.
வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அச்சுறுத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் வட மாநில தொழிலாளர்கள் அச்சப்படத் தேவையில்லை, தமிழக முதல்வர் வடமாநில தொழிலாளர்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பு வழங்கி வருகிறார். வடமாநில தொழிலாளர்கள் அச்சப்பட்டு வெளியேற வேண்டாம். தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல், சில விஷமிகள் பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டு வருகிறார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.