சுமார் 195 நாடுகள் பங்கெடுத்துக்கொண்டு 38 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியதில், மார்ச் 3ம் தேதியன்று நியூயார்க்கில் ‘High Seas Treaty’ என்று அழைக்கப்படும் கடல் ஒப்பந்தம் இறுதி வடிவத்துக்கு வந்திருக்கிறது. இப்போது நடந்து முடிந்திருப்பது இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே. 2004ம் ஆண்டிலிருந்தே இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. அதற்குப் பத்து ஆண்டுகள் முன்பிருந்தே இப்படி ஓர் ஒப்பந்தம் வேண்டும் என்றும் உலக நாடுகள் குரல் எழுப்பி வருகின்றனவாம்! ஆறு சுற்றுகளுக்குப் பிறகு ஒருவழியாக உலக நாடுகள் ஒருமித்த முடிவை எட்டியிருக்கின்றன. 20 ஆண்டுக்கால கோரிக்கை நிறைவேறியிருக்கிறது.
High Seas என்றால் என்ன? அதைப் பற்றிய ஒரு ஒப்பந்தம் ஏன் தேவைப்படுகிறது? இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்ன? இதற்கு ஏன் பத்து ஆண்டுகள் பேச்சுவார்த்தை தேவைப்பட்டது? ஒவ்வொரு கேள்விக்கும் விரிவாக விடை தேடலாம்.
ஒரு நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Exclusive Economic Zones) பற்றி நம் அனைவருக்கும் தெரியும். நிலத்திலிருந்து 200 நாட்டிகல் மைல் வரை, அதாவது 370 கிலோமீட்டர் வரை உள்ள பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அப்பாற்பட்ட, எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பகுதிகள் High Seas என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை மனித இனத்தின் பொது மரபு (Common Heritage of Mankind) என்று அழைக்கலாம். உலகப் பெருங்கடல்களின் பரப்பில் மூன்றில் ஒருபங்கு வகிக்கும் இந்த இடங்களில், யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதே நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. ஒருசில சட்டங்கள் இருந்தாலும் பெரும்பாலும் இது சட்டத்துக்கெல்லாம் அப்பாற்பட்ட பகுதிதான்.
இந்தப் பகுதியில் கட்டுப்பாடுகள் குறைவு என்பதால் மாசுபாடுகள், அளவுக்கதிமான மீன்பிடிப்பு, சுரண்டல் என்று எல்லாமே அதிகம்தான். அதுமட்டுமல்லாமல் இந்தப் பகுதியில் 1.2% நிலப்பரப்பு மட்டுமே இதுவரை பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பகுதிகளுக்குக் கட்டுப்பாடு இல்லை. ஆழ்கடலில் கனிம சுரங்கங்கள் அமைப்பதற்கு உலக நாடுகள் போட்டி போட்டுவரும் சூழலில் விதிமுறைகள் இல்லாமல் எல்லாரையும் அனுமதிப்பதால் இந்த இடம் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று பல வல்லுநர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இந்தச் சூழலில்தான் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளுக்கான பன்னாட்டு உயிரிப் பல்வகைமை மாநாடு ஒன்று நியூயார்க்கில் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஏன் இழுபறியாக இருந்தது என்றால், நிதி ஒதுக்கீடு, மீன்பிடித் தொழில், கனிம வளங்கள் ஆகிய மூன்று அம்சங்களில் நாடுகள் தொடர்ந்து முரண்பட்டன. இந்தப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான நிதி எங்கிருந்து வரும், அந்த நிதியில் வளர்ந்த நாடுகளின் பங்களிப்பு என்ன, இந்தப் பகுதியில் மீன்பிடித்தொழில் மற்றும் கனிம சுரங்கங்கள் அமைப்பதில் உள்ள வரைமுறைகள் என்ன என்பதுபற்றியெல்லாம் நாடுகள் தொடர்ந்து விவாதித்தன. அனல் பறக்கும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இப்போது இறுதி முடிவு எட்டப்பட்டிருக்கிறது.
பல முக்கியமான முடிவுகள் இந்த ஒப்பந்தத்தில் எட்டப்பட்டிருக்கின்றன. அவை…
-
2030க்குள் உலகப் பெருங்கடல்களின் 30% பரப்பளவைப் பாதுகாப்பது – இது 30-30 முடிவு என்று அழைக்கப்படுகிறது.
-
எல்லைக்கப்பாற்பட்ட கடற்பகுதிகளில் உள்ள கடல்சார்ந்த மரபணு வளங்களைப் பொதுவாகப் பகிர்ந்துகொள்வது. கடல் சூழலின் சமூக நீதியை நிலை நிறுத்த இந்த முடிவு நிச்சயமாக உதவும். கடலோரப் பகுதிகள் இல்லாத நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் ஆகியவை இந்த வளப் பங்கீடு மூலம் பயன்பெறும்.
-
எல்லைக்கப்பாற்பட்ட கடற்பகுதியில் எந்த புதிய செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு முன்னர் கட்டாயம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment) செய்யப்படவேண்டும்.
-
எல்லைக்கற்பாற்பட்ட கடற்பகுதிகளில் மீன்பிடித் தொழில் மற்றும் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதற்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும்.
-
ஏற்கெனவே சர்வதேச கடற்பகுதியைப் பாதுகாக்கும் எல்லா அமைப்புகளும் அதே அதிகாரத்துடன் தொடரும்.
-
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வளர்ந்த நாடுகள் புதிதாக நிதி அளிக்கும்.
காலநிலை மாற்றத்துக்கான பாரீஸ் ஒப்பந்தத்துக்கு நிகரான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தம் இது என்று பலர் புகழ்ந்துவருகிறார்கள். இது `கடலின் பாரீஸ் ஒப்பந்தம்’ என்று புகழப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக 40 மில்லியன் யூரோ நிதி உதவி வழங்குவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்திருக்கிறது. அமெரிக்கா ஐந்து பில்லியன் யூரோ வழங்குவதாக அறிவித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 341 புதிய அறிவிப்புகளோடு இந்த மாநாட்டில் 18 பில்லியன் யூரோக்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த இந்த ஒப்பந்தம், இப்போது அடுத்தகட்ட செயல்திட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
எல்லைகளுக்கப்பாற்பட்ட கடற்பகுதியின்மீது உலக நாடுகள் அனைத்திற்குமே ஒரு கண் உண்டு. சொல்லப்போனால் மனித இனம் பெரிதாகச் சுரண்டாத, பூமியில் மீதமிருக்கும் கடைசி பகுதிகளில் இதுவும் ஒன்று. வணிக, பெருநிறுவன, நிலவியல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு திட்டங்களை இந்தப் பகுதி சார்ந்து உலக நாடுகள் வகுத்து வைத்திருக்கின்றன. கனிம வளங்களைச் சுரண்டுவது, வரையறையற்று மீன் பிடிப்பது, பாதுகாப்புக்காகச் சோதனைகள் செய்வது, தேச எல்லைகளை விரிவுபடுத்துவதற்காகச் சிறு தீவுகளை ஆக்கிரமிப்பது, வளங்களை எடுத்துக்கொள்ளப் பெருநிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதன்மூலம் லாபம் ஈட்டுவது என ஒவ்வொரு நாட்டின் அஜெண்டாவும் தனி ரகம். அதைப் பற்றி மட்டுமே ஒரு நீண்ட கட்டுரையை எழுதலாம். இந்தப் பகுதிகளைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியாது என்பதும் அந்தந்த நாடுகளுக்கு வசதியாகப் போய்விட்டது.
“இத்தனை நாள் இந்த இடத்தை கவனிக்காமல் விட்டாச்சே” என்று நாடுகள் கப்பலோடு ஏற்கெனவே கிளம்பிவிட்டன. ஆகவே இந்தச் சூழ்நிலையில் ஒப்பந்தம் வெளிவந்திருப்பதும் முக்கியமானது. இதன் மூலம் ஒரு குறைந்தபட்ச கட்டுப்பாட்டையாவது நிறுவ முடியும். இப்போதே அமெரிக்கா, கனடா, ரஷ்யா, சீனா, நார்வே, ஸ்வீடன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் எல்லைக்கப்பாற்பட்ட கடற்பகுதியில் பல செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றைக் கண்காணித்து ஆக்கிரமிப்பு நடக்காமல் தடுக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்.
இதை நடைமுறைப்படுத்துவதிலும் நிதியை நேர்மையாகக் கையாள்வதிலும் நிச்சயம் சறுக்கல்கள் இருக்கும். அதைச் சரிசெய்தாக வேண்டும். ஆனால் இத்தனை காலமாக ஏட்டளவில் கூட இல்லாத பெருங்கடல் பாதுகாப்பு ஒப்பந்தம் இப்போது முடிவாகியிருக்கிறது. இது நிச்சயம் ஒரு பாய்ச்சல்தான்.
மாநாட்டின் தலைவரான ரெனே லீ கூறியதுபோல, “ஒருவழியாகக் கப்பல் கரைக்கு வந்து சேர்ந்துவிட்டது”.