Oscars 2023 Actro Suriya: இந்தாண்டுக்கான விருது விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் லான் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் வரும் மார்ச் 13ஆம் தேதி ஆஸ்கார் 2023 விருது விழா நடைபெறுகிறது. இவ்விழா இந்தியாவில், மார்ச் 13ஆம் தேதி அதிகாலையில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.
முதல் தமிழ் நடிகர்
இந்த விழாவில் அளிக்கப்படும் விருதுகள், ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினர்களின் வாக்கின் மூலம் இறுதிச்செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினர்கள் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். இதில், நடிகர் சூர்யாவும் ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினர் என்பதால், அவருக்கு வாக்கு செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்கார் 2023 விருதுகளுக்கான தனது வாக்குகளை நடிகர் சூர்யா இன்று செலுத்தினார். இதனை நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தினார். சூர்யா, ஆஸ்கர் உறுப்பினராக தேர்வான முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Voting done! #Oscars95 @TheAcademy pic.twitter.com/Aob1ldYD2p
— Suriya Sivakumar (@Suriya_offl) March 8, 2023
பரிந்துரையில் ஆர்ஆர்ஆர்
தற்போது, பெயரிடப்படாத தனது 42ஆவது திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், பாலா இயக்கத்தில் தயாரான வணங்கான் படத்தில் இருந்து சூர்யா, பாதியில் விலகியிருந்தார்.
மேலும், ஆஸ்கார் விருது விழாவில் இந்திய திரைத்துறை சார்பில், ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் இம்முறை ஆஸ்கார் விருது பரிந்துரையில் உள்ளது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் அந்த பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜிம்மி கிம்மல் 2018க்குப் பிறகு 2023 ஆஸ்கார் விருதைத் தொகுத்து வழங்க உள்ளார். கிம்மலுக்கு பிறகு இந்த நிகழ்ச்சிக்கு சில ஆண்டுகளாக தொகுப்பாளர் இல்லாமல் இருந்தது. கடந்தாண்டு, ரெஜினா ஹால், ஆமி ஷுமர், வாண்டா சைக்ஸ் ஆகிய மூவரும் தொகுத்து வழங்கினர்.